இலங்கையில் பதவி விலகிய இஸ்லாமிய அமைச்சர்களில் 2 பேர் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்பு

கொழும்பு: இலங்கை அரசியலில் புதிய திருப்பமாக பதவி விலகிய இஸ்லாமிய அமைச்சர்களில் 2 பேர் மீண்டும் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டுள்ளனர். இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி ஈஸ்டர் பண்டிகை தினத்தன்று நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில், 258 பேர் பலியாகினர். தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாத இயக்கம் இதில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் இலங்கை இஸ்லாமிய அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், அந்த இயக்கத்துக்கு ஒரு இஸ்லாமிய அமைச்சரும், 2 மாகாண கவர்னர்களும் நிதி உதவி செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்துக்காக இஸ்லாமியர்களின் கடைகள், சொத்துகள் சூறையாடப்பட்டதற்கு இஸ்லாமிய அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இஸ்லாமியர்கள் பாரபட்சமாக கைது செய்யப்படுவதாக அவர்கள் கூறினர். இந்த அதிருப்தியின் தொடர்ச்சியாக, கடந்த 3-ம் தேதி, 9 இஸ்லாமிய அமைச்சர்களும், 2 இஸ்லாமிய மாகாண கவர்னர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனை தொடர்ந்து, அவர்கள் தங்களது முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என புத்த பிட்சுக்களும், ஐக்கிய தேசிய கட்சியினரும் வலியுறுத்தியிருந்தனர். இது தொடர்பாக பதவி விலகிய 9 இஸ்லாமிய அமைச்சர்களும் ஆலோசனை நடத்தியும், அந்த ஆலோசனை கூட்டத்தில் எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் தான் கபீர் ஹசிம், ஹலீம் ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு அதிபர் மைத்திரிபால சிறிசேன பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்ற 2 இஸ்லாமிய அமைச்சர்களும் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர்கள். மீதமுள்ள 7 பேரும் இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் மீண்டும் பதவியேற்பார்களா என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Tags : ministers ,Two ,Sri Lanka , Sri Lanka, Islamic Ministers, sworn in
× RELATED தொழிலாளியை வெட்டிய 2 பேர் கைது