×

தென் ஆப்ரிக்கா ஏமாற்றம் முதலிடத்தில் நியூசிலாந்து

பர்மிங்காம்: தென் ஆப்ரிக்க அணியுடனான உலக கோப்பை லீக் ஆட்டத்தில், 4 விக்கெட் வித்தியாத்தில் அபாரமாக வென்ற நியூசிலாந்து அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. எட்ஜ்பாஸ்டன் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசியது. தென் ஆப்ரிக்க தொடக்க வீரர்களாக டி காக், அம்லா களமிறங்கினர். டி காக் 5 ரன் எடுத்து போல்ட் வேகத்தில் ஆட்டமிழந்தார். அடுத்து அம்லாவுடன் கேப்டன் டு பிளெஸ்ஸி இணைந்தார். டு பிளெஸ்ஸி 23 ரன் (35 பந்து, 4 பவுண்டரி) எடுத்து பெர்குசன் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். 75 பந்தில் அரை சதம் அடித்த அம்லா, 55 ரன் எடுத்த நிலையில் (83 பந்து, 4 பவுண்டரி) சான்ட்னர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இந்த இன்னிங்சின்போது ஒருநாள் போட்டிகளில் அதிவிரைவாக 8000 ரன் கடந்த வீரர் என்ற சாதனை அம்லா வசமானது. அவர் 179 போட்டியில் இந்த சாதனை மைல்கல்லை எட்டி, இந்தியாவின் கோஹ்லியை (183 போட்டி) முந்தினார்.
மார்க்ராம் 38 ரன் (55 பந்து, 4 பவுண்டரி) எடுத்து வெளியேறினார். வாண்டெர் டுஸன் - டேவிட் மில்லர் ஜோடி 5வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 72 ரன் சேர்த்தது. வாண்டெர் அரை சதம் அடித்து அசத்தினார்.
மில்லர் 36 ரன், பெலுக்வாயோ (0) இருவரும் பெர்குசன் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.  தென் ஆப்ரிக்கா 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 241 ரன் குவித்தது. வாண்டெர் டுஸன் 67 ரன் (64 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), மோரிஸ் 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 48.3 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன் எடுத்து வென்றது. கேன் வில்லியம்சன் சதம் அடித்து அசத்தினார். அவர் ஆட்டமிழக்காமல் 138 பந்தில் 103 ரன் எடுத்தார். இந்த வெற்றியுடன் நியூசிலாந்து புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது (9 புள்ளி). தென் ஆப்ரிக்க அணி 6 லீக் ஆட்டத்தில் 4வது தோல்வியை சந்தித்து அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பறிகொடுத்தது.Tags : South Africa ,New Zealand , South Africa, New Zealand, World Cup
× RELATED தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா