நீதிபதி பெயரை கூறி நகைகள் அடகு வைக்க முயற்சி : குமாஸ்தா கைது

சென்னை: ஓட்டேரி நம்மாழ்வார் பேட்டையை சேர்ந்தவர் கண்ணன் (39). உயர் நீதிமன்றத்தில் வெங்கடேசன் என்கிற வக்கீலிடம் குமாஸ்தாவாக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் வக்கீல் மனைவி லதாவுக்கு சொந்தமான 38 சவரன் நகைகள் மற்றும் வைரம் நகைகளை தி.நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் அடகு வைக்க குமாஸ்தா கண்ணன் வக்கீல் மனைவி லதாவுடன் சென்றுள்ளார்.  கடையில் இருந்த ஊழியர்கள் அவர்களிடம் பழைய நகைகளை வாங்க வேண்டும் என்றால் அதற்கான ரசீதுகளை கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதற்கு நகைக்கான ரசீதுகள் கொடுக்க முடியாது என கூறிவிட்டு, ‘‘நாங்கள் யார் என்று தெரியுமா? உயர் நீதிமன்ற நீதிபதியிடம் ஜூனியராக வேலை செய்தவர் வெங்கடேசன். நானும் அவருடன் வேலை செய்தவன்’’ என கூறி தகராறில் ஈடுபட்டார். மேலும், ‘‘வேண்டும் என்றால் நீதிபதியை உங்கள் முதலாளியிடம் பேச சொல்லவா?’’ என்று மிரட்டியுள்ளார். மேலும் வக்கீல் வெங்கடேசனும் போன் மூலம் நீதிபதியிடம் வேலை செய்வதாக கூறியுள்ளார்.

Advertising
Advertising

இதில் சந்தேகமடைந்த ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் அரிகிருஷ்ணன் சம்பவம் குறித்து மாம்பலம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். போலீசார் வந்து குமாஸ்தா கண்ணனிடம் விசாரித்தபோது உயர்நீதிமன்ற நீதிபதி பெயரை தவறாக பயன்படுத்தி நகைகளை அடகு வைக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், வக்கீல் வெங்கடேசன் மற்றும் குமாஸ்தா கண்ணன்  ஆகியோர் மீது ஐபிசி 170, 420, 511 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து குமாஸ்தா கண்ணனை கைது செய்தனர்.

Related Stories: