×

மடிப்பாக்கத்தில் தொடர் மின்வெட்டு மின்வாரிய அலுவலகம் முற்றுகை : சேர்களை உடைத்து மக்கள் ஆவேசம்

ஆலந்தூர்: மடிப்பாக்கத்தில் தினந்தோறும் நள்ளிரவில் ஏற்படும் மின் தடையை கண்டித்து நேற்று முன்தினம் நள்ளிரவு மின் பகிர்மான அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மடிப்பாக்கம் பகுதியில் தொடர்ந்து, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இரவு 9 மணி முதல் 1 மணி வரை தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுகிறது. பகலில் வெயில் கொடுமையால் அவதிப்படும் மக்கள் இரவு நேரங்களில் மின்வெட்டால் அல்லல் படும் நிலை உள்ளது.  இந்த மின்வெட்டை சரி செய்வதில் எந்தவித நடவடிக்கையிலும் மின் துறை அதிகாரிகள் ஈடுபடுவதில்லை என்றும், போன் செய்தால் உரிய பதிலை கூறாமல் மக்களை அலட்சியம் செய்வதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு வழக்கம்போல் மின்தடை ஏற்பட்டுள்ளது. பின்னர் நள்ளிரவு 12 மணியை கடந்தும் மின் வினியோகம் செய்ய ஊழியர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.  

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு திரண்டு மடிப்பாக்கம் பஸ் நிலையம் எதிரில் உள்ள மின் பகிர்மான அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் அங்கிருந்த சேர்களை உடைத்தும், போனை தூக்கி போட்டு கோஷம் எழுப்பினர். உடனே அங்கிருந்த ஊழியர்கள் அறைகளை உள்புறமாக  பூட்டிக்கொண்டனர். தகவலறிந்து மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இனியும் மின்தடை ஏற்படாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.



Tags : Siege ,breaking ,crowds , Madipakkam, Electricity, Electricity office blockade
× RELATED ஒரே மேடையில் பாஜ கூட்டணி தலைவர்கள் தமாகா இப்தார் நோன்பு திறப்பு