×

திருந்தி வாழ்ந்தாலும் போலீசார் தொல்லை கொடுக்கின்றனர்’ கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை முயற்சி: காவல் நிலையம் முன்பு பரபரப்பு

சென்னை: நெசப்பாக்கம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் கார்த்திக் (34). இவர், மீது திருட்டு, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் அசோக் நகர் மற்றும் ராயலாநகர் காவல் நிலையங்களில் உள்ளன. திருட்டு தொழிலை விட்டுவிட்டு கார்த்திக் திருந்தி வாழ முடிவு செய்து கூலி வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், போலீசார் பழைய குற்றவாளி என்பதால் கார்த்திக்கை அடிக்கடி காவல் நிலையம் அழைத்து விசாரித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு தனது மனைவி சுமித்ராவிடம், ‘‘அசோக் நகர் காவல் நிலையத்திற்கு என்னுடன் வா. இனி எந்த குற்றங்களிலும் ஈடுபட மாட்டேன் என எழுதி கொடுத்துவிட்டு வரலாம்’’ என அழைத்துள்ளார். அதற்கு சுமித்ரா, ‘‘உன்னுடன் நான் வரமாட்டேன். நீ ஊர் முழுவதும் திருடிவிட்டு என்னை சாட்சிக்கு அழைத்து செல்ல பார்க்கிறாயா’’ என கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் தனது மனைவியை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. உடனே சுமித்ராவும் கணவனை தாக்கிவிட்டு, ‘‘உன் திருட்டு சம்பவத்தை நான் போலீசாரிடம் கூறிவிட்டு வருகிறேன். நீ ஜெயிலுக்கு போனால்தான் சரிபட்டு வருவாய்’’ என கூறிவிட்டு சென்றார்.சிறிதுநேரம் கழித்து அசோக் நகர் காவல்நிலையத்திற்கு கார்த்திக் சென்று, ‘‘என் மனைவி ஏதேனும் புகார் அளித்தாரா?’’ என கேட்டுள்ளார். அதற்கு போலீசார், ‘‘நீயே குற்றவாளிதான் உன்னை பற்றி உன் மனைவி ஏன் புகார் அளிக்க போகிறார். வீட்டிற்கு செல்’’ என கூறியுள்ளனர். அதற்கு கார்த்திக், ‘‘எனது மனைவி காவல் நிலையத்தில்தான் இருக்கிறார். எனக்கு தெரியும். மனைவியை அனுப்பி வையுங்கள்’’ என்று கூறியுள்ளார். உடனே போலீசார், ‘‘இங்கிருந்து நீ செல்லவில்லை என்றால் உள்ளே பிடித்து போட்டுவிடுவோம்’’ என்று மிரட்டி உள்ளனர்.

இதையடுத்து கார்த்திக் வீட்டிற்கு செல்வதுபோல் சிறிது தொலைவு சென்று மீண்டும் காவல் நிலையம் முன்பு வந்து தனக்கு தானே பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்து ரத்தவெள்ளத்தில் மயங்கிய கார்த்திக்கை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அசோக் நகர் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பகீர் வாக்குமூலம்
கார்த்திக் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுவதாவது: எம்ஜிஆர் நகர் பகுதியில் எந்த திருட்டு மற்றும் கஞ்சா வழக்கு என்றாலும் எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் ஸ்பெஷல் டீமில் பணியாற்றும் போலீசார் ராமமூர்த்தி மற்றும் கருப்பையா என்னை வீட்டிற்கு வந்து அடித்து உதைத்து வருகின்றனர். நான் திருந்தி வாழ்ந்து வருவதாக கூறினால் என்னை விடாமல் காவல் நிலையத்திற்கு அழைத்து வழக்குப்பதிவு செய்கின்றனர். கஞ்சா வழக்கு குறித்து விசாரிக்க ராமமூர்த்தி மற்றும் கருப்பையா என் வீட்டிற்கு நேற்று முன்தினம் வந்து அடித்தனர். என்னால் அடி வாங்க முடியாததால் அசோக் நகரில் மாமியார் வீட்டில் இருந்த என் மனைவியை காவல் நிலையத்திற்கு வந்து சொல் என்று கேட்க வந்தேன். அதற்கு என் மனைவி வரமாட்டேன் என்று கூறிவிட்டார். இதனால் வேறு வழியில்லாமல் நான் காவல் நிலையம் முன்பு 2 போலீசாரிடம் இருந்து என்னை காப்பாத்துங்கள் என்று கூறி கழுத்தை அறுத்துக்கொண்டேன். இவ்வாறு கார்த்திக் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Tags : The police harassed, cut off, and attempted suicide of the plaintiff
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...