சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு போலி டிக்கெட்டுடன் வந்த சீனா நாட்டு வாலிபர் கைது

சென்னை: சென்னையில் இருந்து ஹாங்காங் செல்லும் கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 1.50 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்தது.  அப்போது ஹாலில்சிகு (28) என்ற சீன வாலிபர் ஒருவர் சீன இளம் பெண்ணுடன் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார். விமான நிலைய நுழைவு வாயிலில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினரிடம் இரண்டு பேரும் விமான இ-டிக்கெட் மற்றும் பாஸ்போர்ட்டை காட்டிவிட்டு உள்ளே சென்றனர்.  பின்னர் ஒரு மணி நேரம் கழித்து சீன வாலிபர் மட்டும் விமான நிலையத்தை விட்டு வெளியில் செல்ல வந்தார். வாசலில் இருந்த பாதுகாப்பு படை வீரர்கள் அவரிடம், ‘‘இது பயணிகள் வருகை பகுதி. இந்த வழியாக யாருக்கும் வெளியில் செல்ல அனுமதி இல்லை. இந்த வழியாக ஏன் வந்தீர்கள்? ஏன் வெளியில் செல்கிறீர்கள்?’’ என கேட்டனர்.

அதற்கு அவர், ‘‘நான் பயணம் செய்யவில்லை. என் பயணத்தை ரத்து செய்துவிட்டு வெளியில் செல்கிறேன்’’ என கூறினார். அதற்கு அதிகாரிகள், ‘‘அப்படியானால் உங்கள் போர்டிங் பாஸில் பயணம் ரத்து என்பதற்கான முத்திரை குத்தப்பட வேண்டும்’’ என்றனர்.  இதைத்தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் அந்த போர்டிங் பாசுடன் அவரை கேத்தெ பசிபிக் எர்லைன்ஸ் டிக்கெட் கவுண்டருக்கு அழைத்து சென்று, ‘‘இவரது இ-டிக்கெட்டில் பயணம் ரத்து என்பதற்கான முத்திரையை ஏன் பதிக்கவில்லை? என கேட்டனர். உடனே அதிகாரிகள் அந்த இ-டிக்கெட்டை ஆய்வு செய்தபோது போலி இ-டிக்கெட் என்பது தெரிந்தது. விசாரணையில் ஆந்திர மாநிலம் நெல்லூரில் தாய்வான் நாட்டு நிறுவனம் ஒன்றில் அவர் அதிகாரியாக பணியாற்றுவதும், சீன நாட்டை சேர்ந்த அவரது பெண் தோழியை ஹாங்காங்கிற்கு வழியனுப்புவதற்காக வந்ததும் தெரிந்தது.

சென்னை விமான நிலையம் உச்சக்கட்ட பாதுகாப்பில் உள்ளதால்  பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் இவர் தனது பெண் தோழியின் இ-டிக்கெட்டை கம்ப்யூட்டர் மூலம் ஸ்கேன் செய்து பெண் தோழியின் பெயரை எடுத்துவிட்டு தனது பெயரை சேர்த்து போலி விமான டிக்கெட் தயார் செய்துள்ளார்.  பின்னர் இந்த போலி விமான டிக்கெட், பாஸ்போர்ட்டுடன் விமான நிலையத்துக்குள் வந்து தோழியை விமானம் மூலம் ஹாங்காங்க் அனுப்பிவிட்டு வெளியில் சென்றபோது மாட்டிக்கொண்டுள்ளார்.  எனவே அந்த சீன வாலிபரை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்து விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: