தொடர் குற்ற செயலில் ஈடுபட்டு வந்த 5 பேர் குண்டாசில் கைது

கீழ்ப்பாக்கம்: ஓட்டேரி எஸ்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (38). கூலி தொழிலாளி. கடந்த 2 தினங்களுக்கு முன்பாக வேலை முடிந்து ஆனந்தன் வீட்டிற்கு வந்தபோது ஒருவர் மது அருந்துவதற்கு பணம் கேட்டு மிரட்டினார். ஆனந்தன் பணம் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த அவர் ஆனந்தனை பட்டாக்கத்தியால் வெட்டினார்.  இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரிடம் இருந்து தப்பி வந்து, சென்னை தலைமைச்செயலக போலீசில் ஆனந்தன் புகார் அளித்தார்.  இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது அந்த வாலிபர் புரசைவாக்கம் திடீர் நகர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சக்திவேல் (28) என்பதும், இவர் மீது அயனாவரம், தலைமை செயலக போலீஸ் மற்றும் புளியந்தோப்பு ஆகிய காவல் நிலையங்களில் அடிதடி, கொலை முயற்சி, கொள்ளை, ஆள்கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.

Advertising
Advertising

இதனையடுத்து கீழ்ப்பாக்கம் துணை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், அந்த வாலிபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு பரிந்துரை செய்தார். இதை ஏற்று கமிஷனர் உத்தரவின்பேரில் நேற்று போலீசார் சக்திவேலை குண்டர் சட்டத்தில் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அதேப்போல் போலீசார் விசாரணைக்கு சென்றபோது காவல் துறை வாகனத்தின் கண்ணாடியை உடைத்த கொலை குற்றவாளியான புரசைவாக்கம் பிரிக்ளின் சாலையை சேர்ந்த சக்திவேல் (26), கொலை வழக்கில் தொடர்புடைய தண்டையார்பேட்டை  ஒத்தைவாடை தெருவை சேர்ந்த சதீஷ் (எ) மாங்கா சதீஷ் (26), தண்டையார்பேட்டை அம்மனி அம்மன் தோட்டம் 6வது தெருவை சேர்ந்த செல்வா (எ) தமிழ்செல்வன் (23), பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த புளியந்தோப்பு 2வது குறுக்கு தெருவை சேர்ந்த கென்னடி (எ) ராபர்ட் கென்னடி (38) ஆகிய 4 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது ெசய்தனர்.

Related Stories: