×

காயத்தால் விலகினார் தவான்: ரிஷப் பன்ட் சேர்ப்பு

லண்டன்: இந்திய அணி தொடக்க வீரர் ஷிகர் தவான் காயம் காரணமாக உலக கோப்பை தொடரில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 9ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த லீக் ஆட்டத்தின்போது, பவுன்சர் பந்து தாக்கியதில் தவானுக்கு காயம் ஏற்பட்டது. அந்த போட்டியில் அவர் 117 ரன் விளாசி ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்திய அணி பீல்டிங்கின்போது களமிறங்காமல் ஓய்வெடுத்த தவானுக்கு பின்னர் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இடது கை கட்டைவிரலில் எலும்புமுறிவு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.  இந்த காயம் முழுவதுமாக குணமடைய குறைந்தபட்சம் 3 வாரங்கள் தேவைப்படும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். எனினும், உடனடியாக அணியில் இருந்து தவானை விலக்கிக் கொள்ளாமல் பொறுத்திருந்து பார்க்க அணி நிர்வாகம் முடிவு செய்தது. அதே சமயம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிரடி பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பன்ட் (21 வயது) இங்கிலாந்து வரவழைக்கப்பட்டார்.

பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ரோகித்துடன் இணைந்து கே.எல்.ராகுல் இன்னிங்சை தொடங்கிய நிலையில், 4வது வீரராக ஆல் ரவுண்டர் விஜய் ஷங்கர் களமிறக்கப்பட்டார். இந்திய அணி அடுத்து 22ம் தேதி ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ள உள்ள நிலையில், உலக கோப்பையில் எஞ்சியுள்ள ஆட்டங்களில் தவான் விளையாட மாட்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக ரிஷப் பன்ட் இடம் பெறுகிறார். இதனால் நடுவரிசை பேட்டிங் மேலும் வலுப்பெற்றுள்ளதால் இந்திய அணி உற்சாகம் அடைந்துள்ளது.Tags : DAVIN , Dhawan ,Rishabh
× RELATED சுந்தர் - தாகூர் ஜோடி அபார ஆட்டம் முதல்...