×

ஆஸ்திரேலிய சவாலை முறியடிக்குமா வங்கதேசம்?

ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில், நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியின் சவாலை வங்கதேச அணி எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகளில் 4 வெற்றி, 1 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 2வது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிராக வென்ற அந்த அணி இந்தியாவிடம் மட்டும் தோல்வியடைந்தது. கடைசியாக விளையாடிய 3 லீக் ஆட்டத்திலும் ஆஸ்திரேலியா 300+ ஸ்கோர் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வார்னர், கேப்டன் பிஞ்ச், ஸ்மித், மேக்ஸ்வெல் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல பார்மில் உள்ளனர். ஸ்டார்க், கம்மின்ஸ் வேகமும், மேக்ஸ்வெல் சுழலும் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. இன்றைய போட்டியில் வென்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறும் முனைப்புடன் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது.

அதே சமயம், வங்கதேச அணி 5 போட்டிகளில் 5 புள்ளிகள் பெற்று 5வது இடத்தில் உள்ளது (2 வெற்றி, 2 தோல்வி, 1 ரத்து). பலம் வாய்ந்த தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக வெற்றியைப் பதிவு செய்த வங்கதேசம், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளிடம் போராடி தோற்றது. வங்கதேசம் - இலங்கை அணிகள் மோதவிருந்த லீக் ஆட்டம் கனமழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. வெஸ்ட் இண்டீசுடன் நடந்த போட்டியில் 322 ரன் என்ற கடினமான இலக்கை துரத்தி வெற்றியை வசப்படுத்தியதால் வங்கதேச வீரர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். ஷாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரகிம், தமிம் இக்பால் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். குறிப்பாக ஆல் ரவுண்டர் ஷாகிப் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மோர்டசா, சைபுதின், முஸ்டாபிசுர், மெகதி ஹசன், ஷாகிப் ஆகியோர் பந்துவீச்சில் அசத்துகின்றனர்.

எதிரணியின் பலத்தை கண்டு பயப்படாமல் கடைசி வரை வெற்றிக்காகப் போராடுவதே வங்கதேச அணியின் சிறப்பம்சம். அதே தன்னம்பிக்கையுடன் இன்று நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவின் சவாலையும் முறியடிக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இரு அணிகளுமே வெற்றிக்காக வரிந்துகட்டுவதால், ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், ஷான் மார்ஷ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டாய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், பேட் கம்மின்ஸ், ஜேசன் பெஹரண்டார்ப், நாதன் கோல்டர் நைல், ஆடம் ஸம்பா, நாதன் லயன்.
வங்கதேசம்: மஷ்ராபி மோர்டசா (கேப்டன்), அபு ஜாயித், லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), மகமதுல்லா, மெகதி ஹசன் மிராஸ், முகமது மிதுன் (விக்கெட் கீப்பர்), முகமது சைபுதின், மொசாடெக் உசேன், முஷ்பிகுர் ரகிம் (விக்கெட் கீப்பர்), முஸ்டாபிசுர் ரகுமான், ருபெல் உசேன், சப்பிர் ரகுமான், ஷாகிப் அல் ஹசன், சவும்யா சர்க்கார், தமிம் இக்பால்.

Tags : Bangladesh , Bangladesh ,Australia
× RELATED 4 நாட்களில் கொரோனா நோயை குணப்படுத்தும்...