×

மக்களவை சபாநாயகராக பாஜ எம்பி ஓம் பிர்லா ஏகமனதாக தேர்வு

புதுடெல்லி: மக்களவை சபாநாயகராக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாஜ எம்பி ஓம் பிர்லா ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை பிரதமர் மோடி சபாநாயகர் இருக்கையில் அமரவைத்தார். பாஜ கூட்டணி மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது. 17வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 17ம் தேதி தொடங்கியது. அதில் தற்காலிக சபாநாயகராக வீரேந்திர குமார் தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து தங்கள் கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதை தொடர்ந்து பாஜ சார்பில் புதிய சபாநாயகராக ராஜஸ்தான் மாநிலம் கோடாப்பண்டி தொகுதி எம்பி ஓம் பிர்லா (56) அறிவிக்கப்பட்டார். ஓம் பிர்லாவை சபாநாயகராக நியமிக்க காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இது தவிர தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்காத ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜூஜனதா கட்சியும் பிர்லாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தன.வழக்கமாக மூத்த எம்பிக்களுக்கே சபாநாயகர் பதவி வழங்கப்படும் என்ற நிலையில் பிரதமர் மோடி மற்றும் பாஜ தலைவர் அமித்ஷாவுக்கு நெருக்கமானவரான ஓம் பிர்லா இந்த பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டார். முன்னாள் சபாநாயகராக இருந்த சுமித்ரா மகாஜன் 8 முறை எம்பியாக பதவி வகித்தவர்.

இந்த நிலையில் நேற்று சபாநாயகர் தேர்வு மக்களவையில் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சிகள் வேட்பாளராக யாரையும் நிறுத்தவில்லை. ஓம் பிர்லாவுக்கு ஆதரவாக 13 தீர்மானங்கள் அவையில் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து ஓம் பிர்லா குரல் ஓட்டு மூலம் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டதாக  தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து புதிய சபாநாயகர் ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கைக்கு பிரதமர் மோடி அழைத்து சென்று அமரவைத்தார். தொடர்ந்து பாஜ, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, திமுகவைச் சேர்ந்த டி.ஆர்.பாலு, திரிணாமுல் காங்கிரசின் சுதீப் பந்தோபாத்யாயா ஆகியோர், மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

தொடர்ந்து அவையில் பிரதமர் மோடி பேசியதாவது: அரசு சார்பில் அவையை சிறப்பாக நடத்த நான் முழு ஆதரவையும் தங்களுக்கு வழங்குவேன். அவையை நடத்தும்போது ஆளும் கட்சியினர் யாராவது வரம்பு மீறினால் அவர்கள் மீது நீங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்கலாம். சபாநாயகராக பொறுப்பேற்றுள்ள ஓம் பிர்லா ராஜஸ்தானில் ஆற்றிய சமூக சேவை மறக்க முடியாதது. மாணவர் தலைவராக அரசியலில் நுழைந்த அவர், கல்விக்கு ஆற்றிய பணிகள் சிறப்பானது. இதேபோல் கடந்த 2011ம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், உத்தரகாண்டில் 2013ல் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கின்போது அவர் ஆற்றிய பணிகள் சிறப்பானவை. இவ்வாறு மோடி பேசினார்.

தொடர்ந்து பேசிய காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி `நிலைக்குழு முன் பல மசோதாக்கள் இருப்பது கவலையளிக்கிறது. நிலைக்குழுவுக்கு அனுப்பும் நிலையை சபாநாயகர் ரத்து செய்ய வேண்டும்’ என்றார். இன்று இருஅவை கூட்டுக் கூட்டம்: இதற்கிடையே, இன்று நாடாளுமன்றத்தின் கூட்டுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்று உரையாற்றுகிறார். புதிய அரசு பதவியேற்றதை தொடர்ந்து ஜனாதிபதி உரையாற்றுகிறார்.

மக்களவையில் அமைச்சர்கள் அறிமுகம்

புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய அமைச்சர்களை பிரதமர் மோடி நேற்று மக்களவையில் அறிமுகம் செய்து வைத்தார் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜ கூட்டணி பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. இதை தொடர்ந்து பிரதமர் தவிர 57 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். இதில் 24 ேபர் கேபினட் அமைச்சர்கள், 9 பேர் தனிப்பொறுப்புடன் இணையமைச்சர்கள், 24 பேர் கூடிய இணையமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.  இந்நிலையில் புதிதாக அரசு அமையும்போதோ அமைச்சரவை விரிவாக்கம் அல்லது மாற்றம் செய்யப்படும்போதோ அமைச்சர்களை பிரதமர் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்வது வழக்கம். இந்நிலையில் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளதை தொடர்ந்து நேற்று மக்களவையில் அமைச்சர்கள் குழுவை பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். அப்போது அமைச்சர்கள் பெயர் மற்றும் அவர்கள் வகிக்கும் துறையை பிரதமர் மோடி வாசித்ததும் சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் எழுந்து நின்று அவையில் இருந்த எம்பிக்களுக்கு வணக்கம் தெரிவித்தனர். இதேபோல் நாளை மாநிலங்களவையிலும் அமைச்சர்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைக்கிறார்.

Tags : Om Birla ,BJP ,Speaker ,Lok Sabha , Lok Sabha Speaker, BJP MP, Om Birla
× RELATED பாஜக அரசின் கையாலாகாத தன்மை : ப.சிதம்பரம் தாக்கு