போலீஸ் லத்தி வீசியதில் கணவர் பலி தற்கொலைக்கு முயன்ற மனைவி கவலைக்கிடம்

மதுரை: வாகன சோதனையின்போது போலீசார் லத்தி வீசியதில் கீழே விழுந்து கணவர் பலியானதால், தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. மதுரை எஸ்.ஆலங்குளத்தை சேர்ந்தவர் விவேகானந்தகுமார் (27). வியாபாரி. இவரது மனைவி கஜப்பிரியா (28). கடந்த 15ம் தேதி இரவு விவேகானந்தகுமார் டூவீலரில், தனது நண்பருடன் செல்லூர் புதிய மேம்பாலத்தில் சென்ற போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், டூவீலர் மீது லத்தியை வீசியுள்ளனர். இதில் லத்தி, சக்கரத்தில் சிக்கியதில் தடுமாறி விழுந்த விவேகானந்தகுமார் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Advertising
Advertising

போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உயிரிழந்த விவேகானந்தகுமாரின் மனைவி மற்றும் உறவினர்கள் கடந்த 3 நாட்களாக கலெக்டர் அலுவலகம் முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 17ம் தேதி இரவு, கலெக்டரிடம் மனு அளித்து விட்டு விவேகானந்தகுமாரின் மனைவி கஜப்பிரியா வீட்டுக்கு சென்றார். கணவர் இறப்பு மற்றும் மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இவரை மீட்ட உறவினர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கவலைக்கிடமான நிலையில் உள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விவேகானந்த குமாரின் உறவினர்கள், உடலை வாங்க மறுத்து நேற்று 4வது நாளாக கலெக்டர் அலுவலகம் மற்றும் அரசு மருத்துவமனையில் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். விவேகானந்தகுமாரின் தம்பி சபரி கூறும்போது, ‘‘உடலை வாங்கும்படி உறவினர்கள் மற்றும் நண்பர்களை போலீசார் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். ஆனால் போலீசார் மீது நடவடிக்கை எடுக்காமல் உடலை வாங்க மாட்டோம்’’ என்றார்.

Related Stories: