×

குளிக்க, துவைக்க, கழுவ, மாடுகளை குளிப்பாட்ட அமைச்சர்களின் வீட்டுக்கு தினமும் 2 லாரி தண்ணீர்

சென்னை: தமிழகத்தில் பல இடங்களில் பொதுமக்கள் ஒரு குடம் தண்ணீருக்கு தெருத்தெருவாக அலையும் நிலையில் சென்னையில் அமைச்சர்கள் ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் தினசரி 2 லாரி தண்ணீர் தாராளமாக சப்ளை செய்யப்படுகிறது. இந்த தண்ணீரை தான் அவர்களும், அவர்களது குடும்பத்தில் உள்ளவர்களும் குளிக்க, துவைக்க, கழுவ, தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுவதும் வீடுகளில் உள்ள மாடுகளை குளிப்பாட்டவும் இந்த தண்ணீரையே பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக சென்னை, கோவை, மதுரை, சேலம், வேலூர், நாகர்கோவில் உள்ளிட்ட நகர் பகுதிகளில் அதிகளவில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் ஒரு குடம் தண்ணீருக்காக மக்கள் தெருத்தெருவாக அலையும் பரிதாபநிலை ஏற்பட்டுள்ளது.

தண்ணீர் கிடைக்காததால் சென்னையில் ஓட்டல்கள், மேன்சன்கள், பெண்கள்-ஆண்கள் விடுதிகள் மூடப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில் நிலையங்களில் தண்ணீர் இல்லாமல் கழிவறைகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களில் ஏசி நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை அரசு பொது மருத்துவமனையில் கழிவறைகளில் தண்ணீர் வராததால், துர்நாற்றம் வீசுகிறது. நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் இதனால் அவதிப்படுகிறார்கள். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி கூறி விட்டனர். சில நிறுவனங்கள் ஊழியர்களை பெங்களூர், ஐதராபாத் என்ற வெளி மாநிலத்திற்கு அனுப்பி விட்டனர்.

சென்னை நகர் முழுவதும் வீடுகளுக்கே கார்ப்பரேஷன் தண்ணீர் குழாய் மூலம் விநியோகிக்கப்பட்டு வந்தது. தற்போது, தண்ணீர் இல்லாததால் அதுவும் நிறுத்தப்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளிலும் தண்ணீர் இல்லை. சென்னை மற்றும் புறநகர் மக்கள் லாரிகள் மூலம் சப்ளை செய்யும் தண்ணீரை மட்டுமே நம்பி உள்ளனர். அதுவும் சரிவர கிடைக்கவில்லை. சென்னை குடிநீர் வாரியம் மூலம் தினசரி 4,200 லாரிகள் மூலம் 8,400 நடைகள் தண்ணீர் சப்ளை செய்யப்படுவதாக கூறப்பட்டாலும், குறைவான எண்ணிக்கையில் மட்டுமே லாரிகளில் தண்ணீர் கொடுக்கப்படுகிறது. இதனால் ஒரு குடம் தண்ணீர் பிடிப்பதற்காக லாரி எப்போது வரும் என்று காத்திருந்து சென்னை மக்கள் தூக்கத்தை தொலைத்து வருகிறார்கள்.

 சென்னை புறநகர் பகுதி மக்கள் தங்களது சொந்த செலவிலேயே லாரிகளில் தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு லாரி தண்ணீர் ரூ.1000 அல்லது ரூ.2 ஆயிரத்துக்கு வாங்கி வந்த நிலை மாறி ரூ.5 ஆயிரத்துக்கும் மேல் பணம் கொடுத்து வாங்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளவர்கள் நிலைமைதான் மிகவும் மோசமாக உள்ளது. தண்ணீர் இல்லாததால் வீடுகளை காலி செய்து வருகிறார்கள். உறவினர்கள் யாரும் சென்னைக்கு வர வேண்டாம் என்று கூறி விட்டனர். தண்ணீர் பிரச்னையால் சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் வழக்கத்தைவிட மாதம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை செலவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 ஆனால் இதுபோன்ற சம்பவங்களை எல்லாம் கண்டுகொள்ளாமல், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடே இல்லை என்று கூறுகிறார். அதேபோன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், தமிழகத்தில் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. சென்னை குடிநீர் வாரியம் மூலம் சப்ளை செய்யும் தண்ணீரை பொதுமக்கள் குளிக்கவும், துவைக்கவும் மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்துகிறார்கள். அதனால்தான் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புதிதாக ஒரு தகவலை கூறியுள்ளார். இது தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, ஒரு குடம் தண்ணீருக்காக தெருத்தெருவாக அலையும் மக்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பரபரப்பான நிலையில், சென்னை, அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர்களின் குடியிருப்புகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு உள்ளதா அல்லது அவர்களுக்கு தாராளமாக தண்ணீர் கிடைக்கிறதா என்று கேட்டபோது, சென்னை மெட்ரோ வாட்டர் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னையில் உள்ள மக்களுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. ஒரு பகுதிக்கு ஒருநாள் லாரியில் தண்ணீர் வழங்கப்பட்டால் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் இடைவெளி விட்டுத்தான் மீண்டும் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. ஆனால், சென்னையில் உள்ள 30 அமைச்சர்கள் குடியிருப்புகளுக்கும் தினசரி இரண்டு லாரிகள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. ஒரு லாரி என்பது 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டதாகும். இந்த தண்ணீரை அமைச்சர்களும், அவர்களது வீட்டில் உள்ள குடும்பத்தினர், ஊழியர்கள் அனைவரும் குளிக்கவும், துவைக்கவும் தாராளமாக பயன்படுத்துகிறார்கள்.

மேலும், அமைச்சர்கள் பலரும் வீட்டில் மாடு வளர்க்கிறார்கள். அந்த மாட்டை குளிப்பாட்டவும் இந்த தண்ணீரை தான் பயன்படுத்துகிறார்கள். அதேபோன்று வீட்டு தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சுவது, கார்களை கழுவுவது என அனைத்துக்கும் சென்னை குடிநீர் வாரியம் மூலம் வழங்கப்படும் தண்ணீரையே பயன்படுத்துகிறார்கள். இதேபோன்று, கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் உள்ள அனைத்து விவிஐபிக்களும் தாராளமாக தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீர் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது என்றார்.

Tags : house ,ministers , Minister, 2 lorry water
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்