×

உள்ளாட்சி துறையில் டெண்டர் முறைகேடு விவகாரம் மு.க.ஸ்டாலின் பேச தடை விதிக்க கோரிய மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: உள்ளாட்சி துறையில் டெண்டர் வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக எழுந்த விவகாரம் குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் பேச தடைவிதிக்கக் கோரி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனு வாபஸ் பெறப்பட்டதையடுத்து வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.  உள்ளாட்சி துறையில் கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான டெண்டர்களை தனது உறவினர் மற்றும் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கியதாக புகார் எழுந்தது.

இதையடுத்து அறப்போர் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் முறைகேடுகள் குறித்து தகவல் வெளியிட்டனர். இந்நிலையில் உள்ளாட்சி துறையில் டெண்டர்கள் வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது, விதிகளுக்கு முரணாக தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டெண்டர் வழங்கியுள்ளார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின் போது பேசினார். இதையடுத்து உள்ளாட்சி துறை டெண்டர் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், தன் மீது அவதூறு பரப்பும் விதமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். எனவே மான நஷ்டஈடாக ரூ1 கோடி தரும்படியும் டெண்டர் பற்றி மு.க.ஸ்டாலின் பேசுவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.


இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்ேபாது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சார்பில் ஆஜரான வக்கீல், மு.க.ஸ்டாலின் பேச தடைவிதிக்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெறுவதாக கூறினார்.  இதற்கு அனுமதி அளித்த நீதிபதி, மு.க.ஸ்டாலின் பேச தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தார். இதையடுத்து நஷ்ட ஈடு கேட்ட பிரதான வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Tags : MK Stalin , Local Government, Tender Scam, MK Stalin, High Court
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...