பீகார் மாநிலத்தில் மூளை காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128 ஆக உயர்வு

பாட்னா: பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது. ‘அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம்’ மற்றும் ‘ஜப்பான் என்சபிலிட்டிஸ்’ என 2 வகையான மூளைக்காய்ச்சல் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் முசாபர்பூர் பகுதியில் அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம் மூளைக்காய்ச்சலும் கயா பகுதியில் ஜப்பான் என்சபிலிட்டிஸ் மூளைக்காய்ச்சலும் பரவி இருக்கிறது. நோய் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு முசாபர்பூரில் உள்ள அரசு மருத்துவமனையான ஸ்ரீகிருஷ்ணா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று பலி எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் பாட்னா உள்ளிட்ட நகரங்களில் 115 டிகிரி வரை வெயில் கொளுத்தி வருகிறது. கடும் வெயிலால் மாணவர்கள் கடுமையாக  பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை கருத்திக் கொண்டு அங்கு 24-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மூளைக்காய்ச்சலால் குழந்தைகள் இறப்பது குறித்து தானாக வழக்கை எடுத்துக் கொண்ட தேசிய மனிதஉரிமைகள் ஆணையம் இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி மத்திய சுகாதாரத்துறைக்கும், பீகார் மாநில அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது.மேலும் நேற்று ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனையில் பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் நேரில் ஆய்வு நடத்தினார்.  நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்குமாறு அவர் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.

Related Stories: