சிறுத்தை, வனவிலங்குகள் நடமாட்டம் திருப்பதி மலைப்பாதையில் பக்தர்கள் செல்ல கட்டுப்பாடுகள் : வனத்துறை பரிந்துரை

திருமலை : திருமலையில் மாநில வனத்துறை,  தேவஸ்தான வனத்துறை, திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புத்துறை, திருப்பதி புறநகர் காவல் மாவட்ட போலீசாருக்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் நேற்று நடந்தது. தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் கோபிநாத்ஜெட்டி தலைமை தாங்கினார். கூட்டத்தில், திருமலைக்கு வரக்கூடிய மலைப்பாதையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிறுத்தை தாக்கியதில் 2 பெண்களுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் மாநில வனத்துறை சார்பில் தேவஸ்தான அதிகாரிகளுக்கு சில பரிந்துரைகளை வழங்கினர். திருப்பதி மலைப்பாதை, வெங்கடேஸ்வரா தேசிய வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த இடத்தில் புலி, சிங்கத்தை தவிர மற்ற அனைத்து வகையான விலங்குகளும் உள்ளது. குறிப்பாக 27 முதல் 35  சிறுத்தைகளும், 35க்கும் மேற்பட்ட யானைகள் மற்றும் அனைத்து விதமான விலங்குகள் சேஷாசல வனப்பகுதியில் உள்ளது.

வனவிலங்குகள் குடிநீர் மற்றும் உணவிற்காக அவ்வப்போது மலைப்பாதை வழியாக வருகிறது. மேலும், பக்தர்கள் செல்லும்போது சாலையோரத்தில் உணவு பொருட்களை வீசி செல்கின்றனர். இதனால் குரங்கு, நாய்  போன்றவை சாலையை நோக்கி வருகிறது. இவற்றை வேட்டையாட சிறுத்தை போன்ற விலங்குகள் அங்கு வருகிறது. எனவே திருப்பதியில் இருந்து திருமலைக்கு இருசக்கர வாகனங்கள் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை செல்ல தடை விதிக்க வேண்டும். மேலும், அலிபிரி மலைப்பாதையில் பக்தர்கள் பாதயாத்திரை செல்வதற்கு இரவு 8 மணி முதல் காலை 6 மணி அனுமதி வழங்க கூடாது என வனத்துறை அதிகாரிகள் சிபாரிசு செய்தனர். இதுகுறித்து, முதன்மை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் கோபிநாத்செட்டி கூறுகையில், வனத்துறை அதிகாரிகள் வழங்கிய ஆலோசனை மற்றும் பரிந்துரையின்பேரில் சாத்தியக்கூறுகள் குறித்து நிபுணர்களுடன் ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்றார்.

× RELATED களக்காடு மலையில் தொடரும் வறட்சி...