×

காற்றின் ஈரப்பதத்தில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு 7 லிட்டர் வரை தண்ணீர் தயாரிக்கும் எந்திரம்: திருச்சி ஜங்ஷனில் பயன்பாட்டுக்கு வந்தது

திருச்சி: காற்றின் ஈரப்பதத்தில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு 6 முதல் 7 லிட்டர் வரை தண்ணீர் தயாரிக்கும் எந்திரங்களை ரயில் நிலையங்களில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் பிரச்னை தற்போது தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது. பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் திட்டங்கள் மேம்படுத்தப்பட்டால் தான் எதிர்காலத்தில் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். இந்த நிலையில் காற்றின் ஈரப்பதத்தில் இருந்து தண்ணீரை பிரித்தெடுத்து, தண்ணீர் தயாரிக்கும் எந்திரத்தை பல நிறுவனங்கள் புதிதாக தயாரித்துள்ளது. இதனை ஆங்காங்கே ஒரு சில இடங்களில் பயன்படுத்த தொடங்கி உள்ளனர். அந்த வகையில் தெற்கு ரயில்வேயிலும் இந்த எந்திரத்தை வைக்க நிர்வாகம் முயற்சி மேற்கொண்டுள்ளது.

திருச்சி ஜங்ஷனில் கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலக வளாகத்தில் ஒரு எந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இந்த எந்திரம் மின்சாரத்தில் இயங்கக்கூடியது. குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு 6 முதல் 7 லிட்டர் வரை தண்ணீர் தயாரிக்க முடியும். 24 மணி நேரத்தில் 180 லிட்டர் தண்ணீர் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த எந்திரம் வைக்கப்பட்ட சில நாட்களிலேயே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் இருந்து கிடைக்கும் தண்ணீர் சுத்தமானதாக இருப்பதால் ரயில்வே ஊழியர்களும், அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களும் தண்ணீரை பிடித்து செல்கின்றனர். கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தை தொடர்ந்து திருச்சி கோட்டத்தில் ரயில் நிலையங்களிலும் இந்த எந்திரத்தை வைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், காற்றின் ஈரப்பதத்தில் இருந்து தண்ணீரை பிரித்து தயாரிக் கும் எந்திரம் தனியார் நிறுவனங்களிடம் வாங்கி வைக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக ஒரு எந்திரம் வைக்கப்பட்டது. அது வெற்றிகரமாக இயங்குகிறது. இதனை தொடர்ந்து ரயில் நிலையங்களில் குடிநீர் வசதிக்காக இந்த எந்திரம் ஆங்காங்கே வைக்கப்படும். இதில் குடிநீர் வசதி இல்லாத மற்றும் தட்டுப்பாடு ஏற்படுகிற இடங்களை கண்டறிந்து அங்கு இந்த எந்திரம் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Tags : Trichy Junction , Air humidity, apparatus, applied at Trichy Junction
× RELATED திருச்சி ரயில் நிலையத்தில் ரூ.40 லட்சத்துடன் பிடிபட்ட பெண்ணால் பரபரப்பு