×

வைகோவுக்கு எதிரான தேசத்துரோக வழக்கில் ஜூலை 5ம் தேதி தீர்ப்பு : எம்.பி., எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம்

சென்னை: வைகோவுக்கு எதிரான தேசத்துரோக வழக்கில் ஜூலை 5-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என  சென்னை எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. சென்னை ராணி சீதை மன்றத்தில் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைப்  புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் பேசியிருந்தார். இதுகுறித்து ஆயிரம் விளக்கு போலீசார், வைகோ மீது தேச துரோக வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 52 நாட்கள் சிறையில் இருந்த அவர், ஜாமீன் வேண்டும் என்று வைகோ நீதிமன்றத்தை நாடினார். அந்த மனுவை ஏற்று நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

வழக்கு விசாரணை :

இவ்வழக்கில் வைகோ மீது குற்றச்சாட்டு பதிவு செய்வதற்காக கடந்த வருடம் சென்னை 5வது செஷன்ஸ் கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஈஸ்வரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோ ஆஜரானார். அவரிடம் நீதிபதி, வைகோ மீதான குற்றம் குறித்து படித்துக்காட்டி குற்றச்சாட்டை பதிவு செய்தார். அதற்கு வைகோ, நான் இந்திய அரசின் மீது குற்றச்சாட்டு வைத்தது உண்மைதான். ஆனால், நான் குற்றவாளி அல்ல  என நீதிபதியிடம் தெரிவித்தார். பின்னர் இந்த வழக்கின் விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று இந்த வழக்கு நீதிபதி சாந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான வைகோ,  நான் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசினேன். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு இலங்கை அரசு தான்  காரணம். நான் மத்திய அரசு மீது எந்த காழ்ப்புணர்ச்சியையும் வெளிப்படுத்தவில்லை.  கடந்த 2002ஆம் ஆண்டு நான் மக்களவையில் விடுதலைப்புலிகளை நேற்றும் ஆதரித்தேன் இன்றும் ஆதரிக்கிறேன், நாளையும் ஆதரிப்பேன் என்று பேசியதை சுட்டிக்காட்டி ஒரு பொதுக்கூட்டத்தில் நான் பேசினேன்.

அதற்காக என் மீது பொடா சட்டம் சட்டம் பாய்ந்தது. நான் கைது செய்யப்பட்டேன். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தடை செய்யப்பட்ட அமைப்பைப் பற்றிப் பேசுவது குற்றமாகாது என்று தீர்ப்பளித்தது என்றார். இந்நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் நீதிபதி சாந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கூறிய அவர்; ஏற்கனவே இந்த வழக்கு குறித்து விசாரணை முடிந்த நிலையில் வைகோவுக்கு எதிரான தேசத்துரோக வழக்கில் ஜூலை 5-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.


Tags : court , July 5 verdict, treason case,Vaiko, Special court ,MPs and MLAs...
× RELATED தமிழ்நாட்டில் உள்ள அனைத்து...