×

தமிழகத்தில் காலியாக உள்ள விஏஓ பணியிடங்களை ஓய்வுபெற்ற விஏஓக்கள் கொண்டு நிரப்ப அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் உள்ள 1000 கிராம நிர்வாக பணியிடங்களை ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை கொண்டு நிரப்பப்படவுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசின் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 12 ஆயிரத்து 616 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்கள் உள்ளன. இதில், 2 ஆயிரத்து 896 இடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களில் தகுதியும், அனுபவமும் வாய்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க தமிழக அரசு முடிவெடுத்தது. இதையடுத்து, தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கடந்த பிப்ரவரி 25ம் தேதி இதற்கான அரசாணையை வெளியிட்டது.

இந்நிலையில் முதல் கட்டமாக, மாநிலம் முழுவதும் ஆயிரம் பேரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய வி.ஏ.ஓக்களை பணி அமர்த்தும் வரை, ஓய்வுபெற்ற வி.ஏ.ஓக்களை பணியில் அமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து, இவர்களுக்கு மாதம் தோறும் 15,000 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என்றும் அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஓராண்டு வரையிலோ அல்லது குறிப்பிட்ட கிராமத்தில் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக கிராம நிர்வாக அலுவலர்கள் பணியமர்த்தப்படும் வரையிலும் பொறுப்பில் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிய நிபந்தனைகளின் கீழ் இந்த உத்தரவை அமலாக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் ஆணையரும், கூடுதல் தலைமை செயலாளருமான சத்யகோபால், இது தொடர்பாக ஆட்சியர்களுக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். இந்த அறிவிப்பாணையை தொடர்ந்து அந்தந்த கிராமங்களில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரிகளை பணியமர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Tags : Tamil Nadu ,VAOs , VAO Workplaces, Retired VAOs, Appointment, Government, Publication
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...