கர்நாடக காங்கிரஸ் கமிட்டி கலைந்தது: மாநில காங்கிரஸ் தலைவர், செயல் தலைவர் பதவிகள் நீடிக்கும் என அறிவிப்பு

பெங்களூரு: மக்களைவை தேர்தலில் தோல்வியை தொடர்ந்து கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை அகில இந்திய காங்கிரஸ் தலைமை கலைத்துள்ளது. கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மற்றும் செயல் தலைவர் பதவிகளை தவிர்த்து விட்டு, மொத்தமாக நிர்வாகத்தையே கலைத்துள்ளது. மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் வேணுகோபால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். 17வது மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல்11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. அதன் முடிவுகள் மே 23ம் தேதி அறிவிக்கப்பட்டன. அதில் பெரும்பான்மை இடங்களை பிடித்து பாஜக ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து, 2வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றார். கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரை, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி, பாஜகவை எதிர்த்து களமிறங்கின.

ஆனால், மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 25 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி வெறும் 52 இடங்களை மட்டுமே கைப்பற்றியதால் அக்கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை. கர்நாடகாவை எடுத்துக் கொண்டால் காங்கிரஸ் கூட்டணி வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பாஜக வெற்றி பெற்றிருந்தாலும் ஆட்சிக்கு ஆபத்தில்லை என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து கர்நாடக காங்கிரஸ் கமிட்டியை அகில இந்திய காங்கிரஸ் தலைமை கலைத்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் வேணுகோபால் கூறுகையில், கர்நாடக மாநிலத்தின் காங்கிரஸ் கமிட்டி கலைக்கப்படுகிறது. அதே சமயம் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் செயல் தலைவர் ஆகியோர் தொடர்ந்து பதவியில் நீடிப்பார்கள் என கூறியுள்ளார்.

அதேபோல, கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி காங்கிரசில் இருந்து எம்.எல்.ஏ.ரோஷன் பெய்க் நேற்று அதிரடியாக இடை நீக்கம் செய்யப்பட்டார். பெங்களூர்- சிவாஜிநகர் எம்எல்ஏ-வாக பதவி வகித்து வந்தார். மேலும், தற்போதைய கூட்டணி ஆட்சியில் அமைச்சர் பதவியை எதிர்பார்த்து காத்திருந்த ரோஷன் பெய்க்கிற்கு ஏமாற்றமே கிடைத்தது. இதனால் அவர் அதிருப்தியில் இருந்தார். இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததற்கு முன்னாள் அமைச்சர் சித்தராமையா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் தான் காரணம் என்று கடும் வார்த்தைகளால் விமர்சனம் செய்தார். இதையடுத்து அவர் மீது இந்திய காங்கிரஸ் தலைமையகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என விளக்கம் அளித்தார். மேலும் புதிய கமிட்டியை உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: