ஜூன் 21-ம் தேதிக்கு மேல் தமிழகத்தில் ஆங்காங்கே கனமழை வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வட தமிழக மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னை, வேலூர், கடலூர்,காஞ்சி, மதுரை, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என தெரிவித்துள்ளது. இதனால் இயல்பை விட வெப்பம் 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகமாகவே காணப்படும். எனவே காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையில் சென்னை உள்பட 14 இடங்களில் நேற்று 100 டிகிரி பாரன்ஹீட் அளவை தாண்டி வெப்பநிலை பதிவானது. சென்னை மீனம்பாக்கம், திருத்தணியில் 108 என்ற அளவிலும், நாகை, நுங்கம்பாக்கம் பகுதியில் 106 டிகிரி அளவிலும் வெப்பம் பதிவானது. மதுரையில் 105 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவிலும் வெப்பம் பதிவானது.

வேலூர், திருச்சி, மதுரை தெற்கு, புதுச்சேரி பரங்கிப்பேட்டை, காரைக்கால், கரூர் பரமத்தி, தொண்டி, கடலூர் ஆகிய இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் அளவைத் தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பிறகு அனல் காற்றின் தாக்கம் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசானது முதல், மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் வெப்பச்சலனம் காரணமாக சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 3 செ.மீ,. பெரியகுளத்தில் ஒரு செ.மீ. மழை பெய்துள்ளது எனவும் அறிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம்:

வடக்கு வங்க கடல் பகுதியில் அடுத்த 3 அல்லது 4 நாட்களில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால், தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் வெயிலின் தாக்கம் குறையும் எனவும் ஜூன் 21-ம் தேதிக்கு மேல் தமிழகத்தில் ஆங்காங்கே கனமழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தென்மேற்கு பருவமழை தாமதமாகி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது இந்தியாவின் 15% இடங்களில் மட்டுமே பருவமழை பெய்ய தொடங்கியுள்ளதாகவும், இது வழக்கத்தை விட குறைவு எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. கேரளா, கர்நாடக, தென்பகுதி மற்றும் தமிழகத்தில் சில பகுதிகளில் மட்டுமே பெய்து வரும் மழை மற்ற இடங்களுக்கும் பரவ இன்னும் ஒரு வாரம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மஹாராஷ்டிராவில் வரும் 25ம் தேதியும், நாட்டின் மத்திய பகுதிகளில் வரும் ஜூன் கடைசி வாரத்திலும் மழையை எதிர்பார்க்கலாம் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: