144 குழந்தைகளின் உயிரை குடித்த மூளைக்காய்ச்சலுக்கு லிச்சி பழங்கள் காரணமா ?: ஆய்வு செய்ய ஒடிசா அரசு உத்தரவு

பாட்னா :  பீகாரில் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 144ஆக உயர்ந்துள்ளது. லிச்சி பழங்களில் இருந்து இந்த நோய் தொற்று பரவுவதாக சந்தேகம் எழுந்துள்ளது.

144 குழந்தைகளின் உயிரை குடித்த மூளைக்காய்ச்சல்

பீகாரில் Acute Encephalitis Syndrome என்று அழைக்கப்படும் மூளைக் காய்ச்சல் வைரஸ் தொற்று பச்சிளம் குழந்தைகளின் உயிர்களை வேட்டையாடி வருகிறது. கடந்த 1 வாரத்தில் மூளைக் காய்ச்சலால் 144 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளனர். முசாபர்பூர் மாவட்டத்தில் மட்டும் 117 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

முதல்வர் நிதிஷ் குமார் மீது வழக்கு

முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேலும் 300 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அந்த குழந்தைகளை நேற்று  பார்வையிட சென்ற முதல்வர் நிதிஷ் குமாரை பொதுமக்கள் முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் மீது பொது நல வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இதனிடையே உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணத்தை முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

லிச்சி பழங்கள் காரணமா ?

இதனிடையே லிச்சி பழங்களில் இருந்து வைரஸ் தொற்று பரவி இருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். முசாபர்பூர் மாவட்டத்தில் லிச்சி பழங்கள் அதிக அளவில் விளைகின்றன. இதில் குழந்தைகளுக்கு தேவையான சத்துகள் ஏராளம்.இருப்பினும் அந்த பழத்தை, இரவில் உறங்கும் முன் உணவு எடுத்துக் கொள்ளாமல் வெறும் வயிற்றில் உண்டால், மூளை காய்ச்சல் ஏற்படக் கூடும் என்று கூறப்படுகிறது. எனவே மூளைக் காய்ச்சலுக்கு லிச்சி பழங்கள் காரணமா என்பது குறித்து சோதனை மேற்கொள்ள உணவுப் பாதுகாப்புத் துறைக்கு ஒடிசா மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ நிபுணர் குழு அமைக்கக் கோரி வழக்கு

இதனிடையே, குழந்தைகள் உயிரிழப்பது அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு அக்யூட் என்செபாலிடிஸ் சிண்ட்ரோம் குறித்து ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க சிறப்பு மருத்துவ நிபுணர் குழுவை உடனடியாக அமைக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு திங்களன்று(24-ம் தேதி) விசாரணைக்கு ஏற்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Stories: