தமிழகத்தில் நீர் மேலாண்மை சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டமன்ற தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் இரண்டையும் ஒரே நேரத்தில் நடத்துவது இயல்பான காரியம் அல்ல என்றும், சில மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடத்த இன்னும் வருடங்கள் இருக்கும் பட்சத்தில், இது குறித்து விவாதித்த பின்னரே ஒரு முடிவுக்கு வரமுடியும் என்றும், அதன் பின்னரே இதனை அமல்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் எனக் கூறினார். தமிழகத்தில் நீர் மேலாண்மை சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது எனவும், தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பதற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது என கூறினார். தற்போது ரூ.499 கோடி ஒதுக்கீடு செய்து, நீர்நிலைகளை ஆழப்படுத்தும் பணிகளும் நடைபெறுகின்றன.

தமிழகத்தில் ரூ.500 கோடி அளவில் குடிமராமத்துப் பணிகள் செய்யப்பட்டுள்ளன என்றும், நவம்பர் வரையில் சென்னை மக்களின் தண்ணீர் தேவையை வீராணம் பூர்த்தி செய்யும் எனவும் கூறினார். மேலும், இயற்கை கைகொடுக்க முடியாத நிலையில், லாரிகள் மூலம் அரசு தண்ணீரை விநியோகிக்கப்படுகிறது என்றும் இதுவரை 40% மழை பெய்திருக்கிறது, ஆனால் பாதிக்கு மேல் பருவமழை தவறிவிட்டது இருப்பினும் அரசு சமாளிப்பதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து பேசிய அவர், எதிர் வரும் காலத்தில் வரும் பருவமழை தண்ணீர் பஞ்சத்தை தீர்க்கும் என்றும், குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் தண்ணீர் பிரச்சனையில் அரசியல் செய்வதை ஏற்க முடியாது எனக் கூறினார்.

Related Stories: