மக்கள் சேவைக்காக தனது வாழ்க்கையை அர்பணித்தவர் சபாநாயகர் ஓம் பிர்லா : பிரதமர் மோடி புகழாரம்

புதுடெல்லி: மக்களவை சபாநாயகராக பாஜவை சேர்ந்த ஓம் பிர்லா எம்.பி. போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  ராஜஸ்தான் மாநிலத்தின் கோடாப்பண்டி தொகுதியில் இருந்து எம்பி.யாக தேர்வானவர் இவர், மூன்று முறை எம்எல்ஏ.வாகவும், 2 முறை எம்பி.யாகவும் இருந்துள்ளார். பாஜ தலைவர் அமித் ஷாவிற்கு நெருக்கமானவர். கட்சியின் இளைஞர் பிரிவு தேசிய துணை தலைவராக இருக்கிறார்.

ஓம் பிர்லா போட்டியின்றி ஒருமனதாக தேர்வு

இந்நிலையில் இன்று நாடாளுமன்றக் கூட்டத்தில்  மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லாவை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பிரதமர் உள்பட 12 உறுப்பினர்கள் முன்மொழிந்தனர். ஓம் பிர்லாவை பிரதமர் மோடி முன்மொழிந்தார், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின்கட்கரி ஆகியோர் வழிமொழிந்தனர். *ஓம் பிர்லாவை, அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமாரும் வழிமொழிந்தார். பிரதமரும் மக்களவை காங்கிரஸ் தலைவர் சவுத்ரியும் திமுக குழு தலைவர் டிஆர்.பாலுவும் ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கையில் அமர்த்தினர். ஓம் பிர்லா சபாநாயகராக அனைத்துக் கட்சி எம்பிக்களும் ஆதரவு தெரிவித்தனர்.

புதிய சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடி புகழாரம்

இதையடுத்து புதிய சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். அப்போது ஓம் பிர்லாவை மக்களவை சபாநாயகராக பெற்றதில் பெருமை கொள்வதாக அவர் தெரிவித்தார்.  ஓம் பிர்லா மக்களவையில் சிறந்த சபாநாயகராக விளங்குவார் என்று மோடி நம்பிக்கை தெரிவித்தார். மேலும் பிரதமர் மோடி கூறியதாவது, கோட்டா தொகுதியில் ஒருவர் கூட பசியுடன் உறங்க செல்லக்கூடாது என  மக்களை மையமாக வைத்து அவருடைய அரசியல் செயல்பாடு இருந்தது; குஜராத் நிலநடுக்கத்தின் போது, ஓம் பிர்லா  பாதிக்கப்பட்ட பகுதியில் தங்கி, கடுமையாக பணியாற்றியதை மறக்க முடியாது; கோட்டா தொகுதியில் கல்வி நிலையங்கள் நிறைந்தவையாக விளங்க ஓம் பிர்லாவே காரணம்; கோட்டா தொகுதியில் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்டவர் ஓம் பிர்லா, என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், மக்கள் சேவைக்காக தனது வாழ்க்கையை அர்பணித்தவர் ஓம் பிர்லா என மோடி புகழாரம் சூட்டினார். மேலும் சபாநாயகராக தனது பணிகளை நிறைவேற்ற ஓம் பிர்லாவுக்கு அவை ஒத்துழைக்கும் என்று உறுதி அளித்த பிரதமர் மோடி, கோட்டா தொகுதியில் யாரும் பட்டினியால் வாடக்கூடாது எனபதால் உறுதி ஆக இருந்தவர் ஓம் பிர்லா என்று குறிப்பிட்டார். மேலும் பிரதமர் மோடி கூறியதாவது,மிகவும் எளிமையாக ஆடம்பரமற்ற வாழ்க்கையை ஓம் பிர்லா வாழ்ந்து வருபவர்; பாஜக ஊழியராக நீண்டகாலம் உழைத்த ஓம் பிர்லா, மக்கள் சேவைக்காக தனது வாழக்கையை அர்ப்பணித்தவர் ஓம் பிர்லா; ஓய்வின்றி எப்பொழுதும் மக்களுடன் தொடர்பில் இருந்து வருபவர் ஓம் பிர்லா ; ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே பாலமாக சபாநாயகர் ஓம் பிர்லா இருப்பார்; ஓம் பிர்லாவை மக்களவை சபாநாயகராக ஒரு மனதாக தேர்வு செய்த அனைத்து கட்சியினருக்கும் நன்றி என்று கூறினார்.

சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வாழ்த்து

இதையடுத்து மக்களவையில் திறம்பட பணியாற்ற சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வாழ்த்து தெரிவித்துள்ளார். தாமரை இலையில் தண்ணீர் ஓடாதது போல் கட்சி பாகுபாடின்றி அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டி திருக்குறளை சுட்டிக் காட்டி டி.ஆர்.பாலு உரையாற்றினார். மேலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் சார்பாக தாம் வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் ஓம் பிர்லா தலைமையின் கீழ், மக்களவை சுமுகமாகவும் நியாயமாகவும் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் டி.ஆர். பாலு தெரிவித்தார். இந்நிலையில் மக்களவைக்கு மத்திய அமைச்சர்களை அறிமுகப்படுத்துகிறார் பிரதமர் மோடி. மத்திய அமைச்சர்களின் ஒவ்வொரின் பெயரையும் இலாகாவையும் குறிப்பிட்டு மக்களவைக்கு பிரதமர் மோடி அறிமுகம் செய்கிறார்.

Related Stories: