சொட்டு நீர்பாசனம் அமைப்பதில் குளறுபடி... விரையமாகும் தண்ணீரால் கருகும் பயிர்கள்

உசிலம்பட்டி: உசிலம்பட்டி பகுதியில் வேளாண்மைத் துறை மூலம் சொட்டுநீர் பாசனம் அமைக்க பைப்புகள் அமைப்பதில் குளறுபடியால் தண்ணீர் விரையமாகிறது. இதனால் விவசாயப் பயிர்களுக்கு தண்ணீர் போகாமல் கருகி வருகிறது. உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த 5 ஆண்டுகளாக மழை இல்லாமல் குடிக்கத் தண்ணீருக்கே பொதுமக்கள் போராடி வருகின்றனர். இந்த வறட்சி நிலையிலும், சில விவசாயிகள் போர்வெல் மூலம் குறைந்த அளவுத் தண்ணீர் கொண்டு கரும்பு, மல்லிகை, நெல்லிக்காய், கொய்யா, மாங்காய், செவ்வந்தி, உள்ளிட்ட பயிர்கள் மற்றும் பூ வகைகள் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இதில் வேளாண்மைத் துறையின் 100 சதவீதம் மானிய விலையில், சொட்டுநீர் பாசனம் மூலம் பைப்புகள் அமைத்து கொடுத்து விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை விரையமாக்காமல் விவசாயம் செய்யலாம் என வேளாண்மைத் துறையினர் விவசாயிகளிடம் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் நிலங்களின் தன்மையாலும், பயிர்களின் வேறுபாடுகளாலும் அரசு வழங்கும் சொட்டுநீர் பாசனம் விவசாயிகளுக்கு அரசு விலையில் போதுமானதாக இல்லை. இதனால் விவசாயிகள் மேலும் பணம் கொடுத்து வேளாண்மைத் துறை மூலம் வழங்கப்படும் 100 சதவீத மானிய விலையில் சொட்டுநீர் பாசனத்திற்கு பயன்படுத்துகின்றனர். அதிலும் சொட்டுநீர் பாசனம் பைப் அமைத்து அனைத்துமே பயனில்லாமல் ஓட்டை ஏற்பட்டும் பெரிய பைப்புகளிலிருந்து சொட்டுநீர் பாசனத்திற்கு செல்லக் கூடிய சிறிய பைப்புகளில் தண்ணீர் செல்லாமல் மொத்த பயிர்களுக்கும் தண்ணீர் கிடைக்காமல் காய்ந்து கருகியது. இதனால் விவசாயிகள் சொட்டுநீர் பாசன முறையை ஏன் பயன்படுத்தினோம் என மனவேதனையில் உள்ளனர்.

பன்னைப்பட்டியை சேர்ந்த விவசாயி முத்துராமன் கூறுகையில், நான் நான்கு ஏக்கரில் கரும்பு பயிரிட்டுள்ளேன், அதற்கு வேளாண்மைத் துறையின் மூலம் 100 சதவீதம் மானிய விலையில் சொட்டுநீர் பாசனத்திற்கு பைப் லைன் அமைத்து கொடுத்தனர். அதற்கு ரூ.1 லட்சம் காசோலை மூலம் கொடுத்துள்ளேன். இந்த பாசன முறைக்கு போடப்பட்டுள்ள பைப் மூலம் கரும்பு பயிர்களுக்கு எந்த தண்ணீரும் போய் சேரவில்லை. இதனால் கரும்பு பயிர்களுக்கு முழுமையாக தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. சொட்டுநீர் பாசனம் அமைத்து 90 நாட்களாகி விட்டது, உடைந்து தண்ணீர் வாய்க்காலில் செல்கிறது என 10 முறை வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், வந்து பார்த்து செல்கிறார்களே தவிர இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. வாய்க்காலில் தண்ணீர் பாய்ச்சியிருந்தால் கூட கரும்பு பயிர்களை காப்பாற்றி இருக்கலாம். இதனால் எனக்கு பணமும் இழந்து, மன உளைச்சலும், வேதனையும் அளிக்கிறது என்றார். அன்னம்பாரிபட்டி முனியாண்டி கூறும்போது, சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு உரிய விளக்கங்களை வேளாண்மைத் துறையினர் கூறுவது கிடையாது, அரசு மானியத்தை மட்டும் உயர் அதிகாரிகளின் திருப்திக்காகவும், பதிவேட்டில் விவசாயிகளின் எண்ணிக்கையை கணக்கிட்டு கொள்ளவுமே வேளாண்மை துறையினர் கூறுகின்றனர். உண்மையிலேயே விவசாயிகளின் முழு நலனில் அக்கறை இல்லை. எனவே அதிகாரிகள் அரசு மானிய விலையில் சொட்டுநீர் பாசனம் 100 சதவீதம் என்பது முழுக்க, முழுக்க விவசாயிகளை ஏமாற்றும் செயலாகும் என்று கூறினார்.

Related Stories: