நாமக்கல் அருகே கிராமங்களில் கடும் வறட்சி... உடைந்த குழாயில் தண்ணீரை பிடிக்கும் பெண்கள்

நாமக்கல்: நாமக்கல் அருகே உள்ள கிராமங்களில் கடுமையான வறட்சி நிலவுகிறது.இதனால், பொதுமக்கள் குடிநீருக்கு தவியாய்,தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாமக்கல் அருகே முத்துகாப்பட்டியில் அனைத்து குடியிருப்புகளிலும் ஊராட்சி சார்பில், குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் இந்த ஊராட்சிக்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை. இதன் காரணமாக இந்த ஊராட்சியில் குறிப்பிட்ட சில பகுதி மக்களின் குடிநீர் தாகத்தை ஊராட்சி நிர்வாகத்தால் தீர்க்கமுடியவில்லை.

இதனால், சாலைகளில் செல்லும் குடிநீர் திட்ட உடைந்த குழாய்களில் இருந்து வெளியேறும் கலங்கலான நீரை பெண்கள் குடங்களில் சேகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.முத்துகாப்பட்டி பஸ்நிறுத்தம் அருகே இரண்டு இடங்களில் கடந்த 4 நாட்களாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.அதில் இருந்து வெளியேறும் தண்ணீரை பெண்கள் கொஞ்சம், கொஞ்சமாக சேகரிக்கிறார்கள்.இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த ஜெயலட்சுமி கூறுகையில், கடந்த 4 ஆண்டாக குடிநீர் பிரச்னை இருந்து வருகிறது. ஒரு குடம் தண்ணீர் 7 ரூபாய் கொடுத்து வாங்குகிறோம். தண்ணீர் பிரச்னையை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.முத்துகாப்பட்டியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் உள்ள குடிநீர்தொட்டியில் உள்ள தண்ணீரை அந்த பகுதியில் உள்ள தினமும் ஒரு குடம் வீதம் பிடித்து செல்கிறார்கள்.

இது குறித்து அங்கன்வாடி ஊழியர்கள் கூறுகையில், மையத்தில் உள்ள குழந்தைகளுக்கு தினமும் சமையல் செய்ய பயன்படுத்தப்படும் தண்ணீர் போக மீதமாகும் தண்ணீரை இந்த பகுதியில் உள்ள பெண்கள் பிடித்து செல்கிறார்கள் என்றனர்.மேலும் முத்துகாப்பட்டியில் உள்ள ஊர் பொது கிணறு சுமார் 40 அடி ஆழம் கொண்டது.இந்த கிணற்றில் தற்போது பெய்த மழையால், சற்று தண்ணீர் அதிகரித்துள்ளது. இந்த தண்ணீரை தான் முத்துக்காப்பட்டியில் உள்ள அனைத்து பொதுமக்களும் பயன்படுத்துகிறார்கள். ஊருக்கு பொதுவாக உள்ள குட்டை கழிவு நீர் குட்டையாக மாறி பல ஆண்டாகிவிட்டது. ஊரில் உள்ள ஏரிக்கும் தண்ணீர் வந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது ஊர்பொது கிணற்றில் உள்ள தண்ணீரை தான் அனைத்து மக்களும் பயன்படுத்தி வருகிறார்கள் என அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: