எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை எடப்பாடி கொடுக்கும் மனுக்கள் பிரதமர் அலுவலக அலமாரியில்தான் உள்ளது: கே.எஸ்.அழகிரி அதிரடி பேட்டி

சென்னை: எடப்பாடி பழனிசாமி மத்திய அரசிடம் வைக்கும் எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. என கே.எஸ்.அழகிரி கூறினார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சென்னையில் இருந்து நேற்று காைல 8.30 மணிக்கு டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க முடியாத அரசாக தமிழக அரசு இருக்கிறது. அப்படிப்பட்ட அரசு, மக்களுக்கு தேவையில்லை. இந்தளவுக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதற்கு ஏரி, குளங்களை தூர்வாராததே காரணம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசிடம் வைக்கும் எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. அந்த மனுக்கள், பிரதமர் அலுவலகத்தில் உள்ள அலமாரியில்தான் உள்ளது. இனியும் காலம் தாழ்த்தாமல், மத்திய அரசிடம் குடிநீர் பிரச்னைக்காக சிறப்பு நிதி பெற்று, தமிழகத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க வழிவகை செய்யலாம்.

அதோடு தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். இதை வெளியிடுவதற்கு தமிழக அரசு தயக்கம் காட்டி வருகிறது.  நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பற்றி கூட்டணி கட்சிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும். பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா, ‘திமுகவை அழிப்பேன்’ என்று கூறுவது, சர்வாதிகார தன்மையுடையது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

பொய் சொன்னால்  அரசை கலைக்கலாம்
காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மேலும் கூறியதாவது, தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை  நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் குறிப்பாக  சென்னையில் தண்ணீர் பஞ்சமே இல்லை என்று தமிழக அரசு கூறுகிறது. அரசியல்  சட்ட விதிமுறைகளின்படி ஒரு அமைச்சர் தவறான தகவல்களை சொல்லக் கூடாது என்ற  விதிமுறை உள்ளது. ஆனால் தமிழக அமைச்சர் வேலுமணியே, தவறான தகவல்களை சொல்லிக்  கொண்டிருக்கிறார். இதை காரணமாக வைத்தே, இந்த அரசை கலைக்கலாம் என்றார்.

Tags : Prime Minister's Office , Edappadi, Prime Minister, KS Alagiri
× RELATED பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்