×

இங்கிலாந்து அதிரடியில் தவிடுபொடியானது ஆப்கானிஸ்தான்

மான்செஸ்டர்: ஆப்கானிஸ்தான் அணியுடனான உலக கோப்பை லீக் ஆட்டத்தில், கேப்டன் இயான் மோர்கனின் ருத்ரதாண்டவத்தால் இங்கிலாந்து அணி 397 ரன் குவித்து அசத்தியது.ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக ஜேம்ஸ் வின்ஸ், பேர்ஸ்டோ களமிறங்கினர். நிதானமாக விளையாடிய இருவரும் முதல்  விக்கெட்டுக்கு 9.2 ஓவரில் 44 ரன் சேர்த்தனர். வின்ஸ் 26 ரன் எடுத்து தவ்லத் பந்துவீச்சில் முஜீப் வசம் பிடிபட்டார்.அடுத்து பேர்ஸ்டோவுடன் ஜோ ரூட் இணைந்தார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 120 ரன் சேர்த்தது. சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பேர்ஸ்டோ 90 ரன் (99 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி குல்பாதின் பந்துவீச்சில்  அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து ஜோ ரூட் - கேப்டன் மோர்கன் ஜோடி அதிரடியாக 3வது விக்கெட்டுக்கு 189 ரன் சேர்த்து மிரட்டியது.

குறிப்பாக, மோர்கன் சிக்சர்களாகப் பறக்கவிட்டு அமர்க்களப்படுத்தினார். அவரது இந்த விஸ்வரூபத்தில் பல்வேறு சாதனைகள் தகர்க்கப்பட்டன. ரூட் 88 ரன் (82 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), மோர்கன் 148 ரன் (71 பந்து, 4 பவுண்டரி, 17 சிக்சர்) விளாசி குல்பாதின் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த பட்லர், ஸ்டோக்ஸ் தலா 2 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.கடைசி கட்டத்தில் மொயீன் அலி தன் பங்குக்கு 4 சிக்சர்களைப் பறக்கவிட்டார். நட்சத்திர ஸ்பின்னர் ரஷித் கான் பந்துவீச்சு சுத்தமாக எடுபடாதது ஆப்கன் அணிக்கு பெரும் பின்னடைவைக் கொடுத்தது. இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 397 ரன் குவித்தது. மொயீன் 31 ரன் (9 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்), வோக்ஸ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
வங்கதேச பந்துவீச்சில் தவ்லத் ஸத்ரன், குல்பாதின் நயிப் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 398 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 30 ஓவர் முடிவில் 3 விக்கெட்  இழப்புக்கு 125 ரன் எடுத்திருந்தது. நூர் அலி (0), குல்பாதின் (37), ரகமத் ஷா 46 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். ஹஸ்மதுல்லா - அஸ்கர் ஆப்கன் ஜோடி 4வது விக்கெட்டுக்கு கவுரமான ஸ்கோரை எட்ட போராடியது.

1 கல்... 3 மாங்கா!..சிக்சர் மழையில் உலக சாதனை!
ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்த இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மோர்கன் 148 ரன் விளாசினார். அவரது இந்த மிரட்டலான இன்னிங்சில் பல உலக சாதனைகள் உடைந்து நொறுங்கின.
மோர்கன் அதிரடியில் நேற்று 4 பவுண்டரி, 17 சிக்சர்கள் பறந்தன. ஒருநாள் போட்டியின் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் மோர்கன் முதலிடம் பிடித்தார். இந்தியாவின் ஹிட்மேன் ரோகித் ஷர்மா, தென்  ஆப்ரிக்காவின் மிஸ்டர் 360 டிவில்லியர்ஸ், வெஸ்ட் இண்டீசின் யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கேல் ஆகியோர் தலா 16 சிக்சர்கள் விளாசி முதலிடத்தை பகிர்ந்து கொண்டிருந்த நிலையில், மோர்கன் இந்த மூவரையும் 2வது இடத்துக்கு தள்ளினார்.
* உலக கோப்பையின் ஒரு இன்னிங்சில் தனிநபரால் அடிக்கப்பட்ட அதிக சிக்சராகவும் இது அமைந்தது. முன்னதாக 2015 உலக கோப்பையில் ஜிம்பாப்வேக்கு எதிராக கிறிஸ் கேல் 16 சிக்சர்கள் விளாசிய சாதனையும் தகர்ந்தது.
* இங்கிலாந்து இன்னிங்சில் மொத்தம் 25 சிக்சர்கள் விளாசப்பட்டன. முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக கிரெனடாவில் நடந்த ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 24 சிக்சர் விளாசியதே சாதனையாக  இருந்தது. இந்த சாதனையை இங்கிலாந்து அணியே நேற்று முறியடித்தது.
* ஆப்கன் சுழல் ரஷித் கான் பந்துவீச்சில் 11 சிக்சர்கள் பறந்தன. ஒருநாள் போட்டி வரலாற்றில் இதுவே அதிகபட்சமாகும். அவர் வீசிய 9 ஓவரில் 110 ரன் விட்டுக்கொடுத்தார். உலக கோப்பை போட்டியில் ஒரு பவுலரின் மிக மோசமான  செயல்பாடாக இது பதிவானது. முன்னதாக, 1983 உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்தின் மார்டின் ஸ்னெடன் 12 ஓவரில் 105 ரன் விட்டுக் கொடுத்திருந்தார்.
* 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 397 ரன் குவித்தது, உலக கோப்பையில் இங்கிலாந்து அணியின் அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது. நடப்பு தொடரில் வங்கதேசத்துக்கு எதிராக கார்டிப் மைதானத்தில் 386 ரன் எடுத்திருந்த இங்கிலாந்து, அந்த  சாதனையையும் தகர்த்தெறிந்தது.



Tags : stadium ,England ,Afghanistan , Afghanistan , staple ,UK
× RELATED அணியின் நலனுக்காக புதிய...