எம்எல்ஏ அலுவலகத்தில் மின்சாரம் பயன்படுத்தியும் மின்கட்டணம் கட்டாத அமைச்சர் ஜெயக்குமார் டிடிவி தினகரனுக்கு மின்துறை நோட்டீஸ்

சென்னை: அமைச்சர் ஜெயக்குமார் , டிடிவி தினகரன் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்களுக்கு மின் கட்டணம் செலுத்தவில்லை. இதனால் பணம் கட்டச் சொல்லி மின்துறை அலுவலகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை ராயபுரம் சப்-டிவிசனுக்கு உட்பட்ட மின்வாரிய அலுவலகங்களான ராயபுரம், கல்மண்டபம், ஆர்.கே.நகர், வ.உ.சி.நகர் உள்ளிட்ட பகுதியில் மின் வாரியத்திற்கு பணம் செலுத்தாமல் திருட்டுதனமாக மாநகராட்சி அலுவலகம், அரசியல் கட்சியினரின் அலுவலகம், அரசியல் முக்கிய பிரமுகர்களின் வீடுகள் மற்றும் நிறுவனங்கள் என பலர் மின்கட்டணம் செலுத்தாமல் சுமார் 50 லட்சம் வரை பல ஆண்டுகளாக திருட்டுத்தனமாக உபயோகித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 6 மாதத்துக்கு முன்பு ராயபுரம் மின்வாரிய அலுவலகத்திற்கு புதிதாக மதிப்பீட்டு அலுவலர் நியமிக்கப்பட்டார்.

அவர் வந்து இந்த பகுதிகளில் ஆய்வு செய்ததில், திருட்டுத்தனமாக மின்வாரியத்திற்கு பணம் செலுத்தாமல் பலர் மின்சாரத்தை பயன்படுத்தி வருவது தெரியவந்தது. இதுகுறித்து முறையாக மேல் அதிகாரிக்கு தகவல் கொடுத்து அதன் அடிப்படையில் ஆய்வு செய்ததில் பணம் செலுத்தாமல் உள்ள ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் ஜெயக்குமார் அலுவலகம் மற்றும் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் அலுவலகம் ஆகியவற்றிற்கு முறையாக நோட்டீஸ் வழங்கப்பட்டது. அபராத தொகை செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என அதிகாரிகள் அதில் தெரிவித்திருந்தனர்.

இதேபோல், இந்த பகுதியில் சென்னை மாநகராட்சி பொது கழிப்பிடம், 20 இடங்களில் மின்சாரம் கட்டணம் செலுத்தாமல் இயக்கப்படுகிறது. அதேபோல் ராயபுரம் பகுதியில் அம்மா உணவகம், அரசியல் பிரமுகர்கள் வீடுகள், கட்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் மின் கட்டணம் செலுத்தாமல் இருந்து வந்தன. இதனை கண்டறிந்து அவர்களுக்கு முறைப்படி நோட்டீஸ் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் ₹20 லட்சத்திற்கும் மேல் தற்போது வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ₹30 லட்சம் வசூல் செய்யப்பட உள்ளது. மேலும் திருட்டுத்தனமாக மின்சாரம் பயன்படுத்திய 20 க்கும் மேற்பட்ட இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இதுபோல் சென்னை நகர் முழுவதும் மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டால் மின்வாரியத்திற்கு மின்கட்டணம் செலுத்தப்படாமல் திருட்டுத்தனமாக உபயோகப்படுத்துவதை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதன் மூலம் மின்சார வாரியத்திற்கு பல லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும்.

இதன் காரணமாக மின்சார கேபிள் புதிதாக வாங்கலாம். டிரான்ஸ்பார்மர் புதிதாக அமைக்கலாம். இதுபோல் பல்வேறு பணிகளுக்கு வசூலாகும் பணத்தை மின்சார வாரியம் பயன்படுத்தலாம். இதற்கெல்லாம் அதிகாரிகள் லஞ்சம் பெறாமல் நேர்மையாக செயல்பட்டால் தான் இது வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படும். தற்போது ராயபுரம் பகுதியில் தொடங்கிய இந்த நடவடிக்கையை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெற்றால் பல கோடி ரூபாய் வருவாய் மின்வாரியத்திற்கு கிடைக்கும் என்றனர்.Tags : MLA , Electricity Notice to Minister of Power and Energy Jayakumar DTV Dinakaran in MLA's office
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் அமையவுள்ள...