தண்ணீர் பிரச்னையை சமாளிக்க எம்பிக்கள் நிதியில் இருந்து 2 டேங்கர் லாரி தரவேண்டும்: திருநாவுக்கரசர் ஆலோசனை

சென்னை: தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் எம்பி  நேற்று காலை 6.10 மணிக்கு விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அப்போது அவர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:தமிழகத்தில் கடுமையான குடிநீர் பிரச்னை நிலவி வருகிறது. நாட்டில் பெருவெள்ளம், புயல் பூகம்பம் போன்றவைகள் ஏற்படும்போது அந்தப் பகுதியை பேரிடர் பாதிப்பு பகுதியாக அறிவிப்பது போல்  தற்போது இந்த கடுமையான வறட்சி மனிதர்களுக்கு மட்டுமின்றி கால்நடைகளுக்கு கூட குடிநீர் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, தமிழகத்தை பேரிடர் பாதிப்பு பகுதியாக அறிவிக்க வேண்டும். அதோடு மத்திய அரசு தமிழகத்துக்கு இந்த வறட்சியை சமாளிக்க கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

புதிய திட்டங்களை செயல்படுத்தி மக்களின் தண்ணீர் பிரச்னையை தீர்க்க முன்வரவேண்டும். எம்பிக்களை பொறுத்தமட்டில் அவர்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒவ்வொரு எம்பியும் இரண்டு  குடிநீர் லாரிகளை  வாங்கி உள்ளாட்சி அமைப்புகளுக்கு கொடுத்து மக்களுக்கு தண்ணீர் விநியோகிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் என்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து  உடனடியாக இரண்டு டேங்கர் லாரிகள் வாங்கி திருச்சி மாநகராட்சியிடம் ஒப்படைக்க உள்ளேன். மேலும் அரசு கிராமப் பகுதியில் உள்ள தண்ணீர் பிரச்னையை தீர்க்க மாட்டு வண்டிகளில்  டேங்குகளில் தண்ணீர் எடுத்துச்சென்று குக்கிராம மக்களுக்கு விநியோகிக்க வேண்டும்.

Related Stories: