சீனாவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் : 12 பேர் பலி;122 பேர் படுகாயம்

பெய்ஜிங் : சீனாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 12 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள இபின் என்னும் நகரில் அடுத்தடுத்து 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 10.55 மணிக்கு முதல்

நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 6.0 ஆக பதிவான நிலநடுக்கம், சிச்சுவானில் 16கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.  இந்நிலையில் இன்று அதிகாலை 5.3 அளவிலான நிலநடுக்கம் சிசுவான் மாகாணத்தை மீண்டும் தாக்கியது. அடுத்தடுத்த நில அதிர்வுகளால் கட்டிடங்கள் சரிந்து விழுந்தன.

இடிபாடுகளில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 122 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நில அதிர்வு ஒரு நிமிடம் நீடித்ததாக உள்ளூர் மக்கள்  தெரிவித்துள்ளனர். பூகம்பத்திற்கு பிந்தைய அதிர்வுகள் தொடர்ந்து வருவதால் இபின் நகர மக்கள் வீடுகளுக்கு செல்லாமல் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். நிலநடுக்கம் மற்றும் பின் அதிர்வுகளை அடுத்து சிச்சுவானில் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன.இதனிடையே கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: