சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி டாக்டர்கள் போராட்டத்தால் நோயாளிகளுக்கு பாதிப்பில்லை

புதுக்கோட்டை: மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளிகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று புதுக்கோட்டையில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மனு அளிக்க வரும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்காக பேட்டரி பொருத்தப்பட்ட வாகனத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை வகித்தார்.  இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேட்டரி பொருத்தப்பட்ட வாகனத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:  புதுக்கோட்டை மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தொடர்ந்து பல்வேறு பகுதியில் நடைபெறும். முழுமையாக அனைத்து பொதுமக்களுக்கும் வீட்டு மனை பட்டா வழங்கப்படும். மருத்துவர்கள் இரவு பகல் பாராமல் உள்ளார்ந்த உணர்வோடு சேவை மனப்பான்மையோடு பணிபுரிந்து வருகின்றனர். கொல்கத்தாவில் நடந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்கள் அடையாள போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவர்களின் போராட்டத்தால் நோயாளிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. மருத்துவர்களுக்கு பணி பாதுகாப்பு என்பது அவசியமான ஒன்று. தமிழகத்தில் மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: