×

கதுவா சிறுமி பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை ஏன்? காட்டுமிராண்டிதனமான குற்றத்துக்கு நியாயமான நீதி அளிக்கப்பட வேண்டும்: 432 பக்க தீர்ப்பில் நீதிபதி கருத்து

பதான்கோட்: ‘‘காட்டுமிராண்டிதனமான குற்றத்துக்கு நேரடியான ஆதாரம் இல்லையென்றாலும், நியாயமான நீதி அளிக்கப்பட வேண்டும்’’ என கதுவா சிறுமி பலாத்கார வழக்கின் தீர்ப்பில் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் 8 வயது பழங்குடியினச் சிறுமி ஒருவர் கடந்தாண்டு ஜனவரி மாதம் பலாத்கார கொலை செய்யப்பட்டார். மயக்க மருந்து கொடுக்கப்பட்டு கடத்தப்பட்ட சிறுமியை, ஒரு கோயிலில் அடைத்து வைத்து ஒரு கும்பல்  4 நாட்களாக கூட்டு பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்றது.
நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் பஞ்சாப் மாநிலம் பதான்கோட் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிமன்றம் கடந்த 10ம் தேதி அளித்த தீர்ப்பில், குற்றவாளிகள் 3 பேருக்கு ஆயுள் தண்டனையும், சம்பவத்தை மறைக்க, லஞ்சம் பெற்று  உடந்தையாக இருந்த போலீசாருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்தது. 432 பக்கத்தில் நீதிபதி தேஜ்விந்தர் சிங் அளித்த  தீர்ப்பின் நகல் இப்போதுதான் வெளியானது. அதில் குற்றவாளிகளுக்கு எதிராக நேரடி ஆதாரம் இல்லாத நிலையில், தண்டனை வழங்கப்பட்டது ஏன் என்பதை நீதிபதி விரிவாக விளக்கியுள்ளார்.  குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான 57 வக்கீல்கள் தாக்கல் செய்த அப்பீல் மனுவில், ‘‘இந்த பலாத்கார கொலை வழக்கில் எந்த குற்றவாளிகளுக்கும் எதிராக நேரடி ஆதாரம் எதுவும் இல்லை’’ என கூறியிருந்தனர். இதற்கு பதில் அளித்து நீதிபதி  கூறியிருந்ததாவது:

இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிராக நேரடி ஆதாரம் இல்லை என்றாலும், சூழ்நிலை ஆதாரங்களை விசாரணை குழுவினர் ஒரு சங்கிலி தொடர் போல் தெளிவாகவும், முழுமையாகவும் சுட்டிக் காட்டியுள்ளனர். இந்த வழக்கில்  குற்றவாளிகள் பற்றி தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்பதற்கு எந்த ஆவணங்களையும் மனுதாரர்களின் வக்கீல்கள் தாக்கல் செய்யவில்லை.  இதன் மூலம் இந்த கொடூர குற்றத்தை, இந்த குற்றவாளிகள்தான் செய்தனர் என்ற முடிவுக்கு  வருவதில் இருந்து தப்ப முடியாது. சொர்க்கம், நரகம் என பூமியில் எதுவும் இல்லை. நமது சிந்தனைகளும், செயல்களும்தான் சொர்க்கம், நரகம் என்ற சூழலை நமக்கு உருவாக்குகிறது. மைனர் சிறுமிக்கு எதிராக செய்யப்பட்டுள்ள குற்றம், வெட்கப்பட வேண்டியது,  மனிததன்மையற்றது, காட்டுமிராண்டிதனமானது. இந்த வழக்கில் இதைச் செய்தவர்களுக்கு நியாயமான முறையில் தண்டனை அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு நீதிபதி விளக்கம் அளித்துள்ளார்.




Tags : Judge , Kudawa l, served, Judge,judgment
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...