×

கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக முதல்வர் மம்தா உறுதி மே.வங்கத்தில் மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா மற்றும் மருத்துவர்கள் இடையே நடந்த பேச்சில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து மருத்துவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் கடந்த 10ம் தேதி உயிரிழந்ததால், அவரது உறவினர்கள் அங்கு பணியாற்றி வரும் 2 பயிற்சி  டாக்டர்களை தாக்கினர். இதை கண்டித்தும், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் 11ம் தேதி முதல் அம்மாநிலம் முழுவதும் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும்,  மருத்துவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களுக்கு ஆதரவாகவும், இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாடு முழுவதும் கடந்த 14ம் தேதி முதல் 3 நாள் போராட்டங்கள் நடந்தன.இந்நிலையில், போராட்டத்தின் தொடர்ச்சியாக இந்திய மருத்துவ சங்கத்தின் ஆதரவோடு, நாடு முழுவதும் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை மருத்துவர்கள் வேலைநிறுத்தம் நடந்தது. இதன் மூலம்  மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட அத்தியாவசியமில்லாத பணிகளை மருத்துவர்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அவசர மற்றும் விபத்து சிகிச்சை பிரிவுகள் மட்டும் வழக்கம்போல் இயங்கின.  மேலும், மருத்துவர்கள் மீது இதுபோன்ற தாக்குதல் நடத்துபவர்களுக்கு கடும் தண்டனை அளிக்கும் வகையில் நாடு முழுவதும் ஒரே சீரான சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும் எனவும் இந்திய மருத்துவ சங்கத்தின் தரப்பு அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மாபெரும் போராட்டத்தால் நாடு முழுவதும் உள்ள நோயாளிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

மேற்கு வங்கத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்திருந்தார். இந்த பேச்சுவார்த்தைக்கு நேற்று முன்தினம் மருத்துவர்களும் சம்மதம்  தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியுடன் மருத்துவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பல்வேறு மருத்துவ கல்லூரிகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.  இந்த  பேச்சுவார்த்தையின்போது பணியிடங்களில் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மம்தா பானர்ஜி உறுதியளித்தார். மேலும் மருத்துவர்களின் குறைகளை போக்க குறைதீர்வு மையம் அமைக்கவும் முதல்வர் உத்தரவிட்டார். மருத்துவர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார். இதனையேற்ற மருத்துவர்கள்  தங்களது ஒரு வார கால போராட்டத்தை கைவிட ஒப்புக்ெகாண்டனர். இதுகுறித்து மருத்துவர்களின் பிரதிநிதிகள் கூறுகையில், முதல்வருடனான பேச்சுவார்த்தை திருப்தி அளித்தது. எங்களது கோரிக்கைகள் ஏற்கப்பட்டது. இதனால் போராட்டத்தை திரும்ப பெறுகிறோம் என்றனர். முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் மருத்துவர்களுடன் நடந்த இந்த பேச்சுவார்த்தையின்போது ஊடகங்களுக்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் மருத்துவர்களின் கோரிக்கையை தொடர்ந்து  2 உள்ளூர் ஊடகங்களில் பேச்சுவார்த்தை  நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
அலோக் வஸ்தாவா என்பவர் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் தீபக்குப்தா மற்றும் சூர்யகாந்த் ஆகியோர் முன்னிலையில் நேற்று ஒரு கோரிக்கை வைத்தார். அதில், மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிராக அரசு  தரப்பு மருத்துவர்கள் நாடு முழுவதும் பல்வேறு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவர்கள் என்ற போர்வையில் போராட்டத்தின்போது சமூக விரோதிகளும் மறைமுகமாக கலந்து கொண்டு வன்முறையை தூண்டி  விடுகின்றனர். அதனால் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த மனுவை இன்று அவசர வழக்காக விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.




Tags : Mamata , Chief Minister, Mamta,demands, Doctors , May
× RELATED ராம நவமியின்போது பாஜ வன்முறையை தூண்டியது: முதல்வர் மம்தா குற்றச்சாட்டு