×

பாகிஸ்தான் மீதான மற்றொரு தாக்குதல் இந்திய கிரிக்கெட் அணிக்கு அமித்ஷா பாராட்டு

புதுடெல்லி: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பெற்ற வெற்றி பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட மற்றொரு சர்ஜிக்கல் தாக்குதல் என்று இந்திய கிரிக்கெட் அணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார். 12வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த 30ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 14ம் தேதி வரை நடைபெறுகிறது. இங்கிலாந்து, வேல்ஸ் நாடுகள் இந்த போட்டிகளை நடத்துகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம்  இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய லீக் சுற்று போட்டி ஓல்டுடிரபோர்டு மைதானத்தில் நடந்தது. வழக்கம்போல பரபரப்பும் பதற்றமும் நிறைந்த இந்த போட்டியில் இந்தியா 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்தியாவின் வெற்றி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தனது டிவிட்டர் பதிவில், `இந்த போட்டி இந்திய கிரிக்கெட் அணியினரால் பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதல். அதேபோன்று, இதிலும் இந்தியாவுக்கு  வெற்றி கிடைத்துள்ளது. இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். இந்த மகத்தான வெற்றியை ஒவ்வொரு இந்தியனும் பெருமையுடன் கொண்டாட வேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.கடந்த பிப்ரவரி 14ம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பிப்.26ம் தேதி பாகிஸ்தானின் பாலகோட்டில் தீவிரவாதிகளின் முகாம் மீது இந்திய ராணுவம் தாக்குதல்  நடத்தியது.
அதற்கு முன், கடந்த 2016 செப்டம்பரில் உரி ராணுவ முகாமில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, செப்டம்பர் 29ம் தேதி இந்தியா சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியது.

பலுசிஸ்தான் குதூகலம்
பாகிஸ்தானை இந்திய கிரிக்கெட் அணி வீழ்த்தியதை இந்தியர்களைபோன்று, பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மக்கள் பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடினர். பாகிஸ்தானில் இருந்து தனிநாடு கோரும் அவர்களின் போராட்டத்தை ஒடுக்கும்  வகையில் மனித உரிமை மீறல்களில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருவதால், இந்தியா அவர்களை ஆதரிக்கிறது. அதனால் அவர்கள் இந்தியாவின் வெற்றியை கொண்டாடினர். இது தொடர்பான ஹேஷ்டேக், டிக்டாக் வீடியோ சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது.




Tags : Amit Shah ,Indian ,attack ,Pakistan , Another attack ,Pakistan, Indian cricket, team
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...