பயோ கேரிபேக் தயாரிப்பு 24 மணிநேரத்தில் உரிமம் வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு வணிகர் சங்க பேரமைப்பு வேண்டுகோள்

சென்னை: பயோ கேரிபேக் தயாரிப்பதற்கான உரிமத்தை 24 மணி நேரத்தில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.இதுதொடர்பாக, சங்கத்தின் தலைவர் விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பிளாஸ்டிக் தடை சம்பந்தமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அரசாணைக்கு ஏற்கனவே முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது.  ஆனால், தயாரிக்கப்பட்ட 14 வகை பிளாஸ்டிக் பொருட்களை தயாரிப்பு  நிலையிலேயே தடை செய்து, அபராதம் விதிப்பு செய்திடவேண்டும் என பலமுறை வலியுறுத்தி வருகிறது. காரணம், தடை தமிழ்நாட்டில் மட்டும்தான்.

எனவே, பிளாஸ்டிக் பொருட்களுக்கு அபராதம் விதிக்கும் முன்னர், விற்பனையாளர் மற்றும் பயனாளிகளை முறையாக எச்சரித்து, தடை செய்யப்பட்ட 14 வகை பிளாஸ்டிக் பொருட்களை மட்டுமே அதிகாரிகள் கைப்பற்ற முனைய  வேண்டுமே தவிர, தடை செய்யப்படாத பிளாஸ்டிக் பொருட்களை எந்த வகையிலும் அதிகாரிகள் முறைகேடாக கைப்பற்றக்கூடாது எனவும், அந்தப் பொருட்களுக்கு அபராதம் விதிப்பதையும் தடுத்திடும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்  படவேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு எச்சரிக்கை உணர்வோடு தெரிவித்துக்கொள்கிறது. மேலும், பயோ கேரிபேக் தயாரிப்பு நிலையை துரிதப்படுத்த வேண்டும்.  அவை தயாரிப்பதற்கான லைசென்ஸ்கள் பெறுவதற்கு மிகவும் சிரமப்படவேண்டிய நிலை உள்ளது.  24 மணி நேரத்தில் பயோ கேரிபேக்குக்கான லைசென்ஸ்கள்  வழங்கும் முறை கொண்டுவரப்படவேண்டும். பயோ கேரிபேக் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் இந்த கோரிக்கையினை தமிழக அரசு ஜனநாயக முறையில் பரிசீலித்து உரிய நடவடிக்கைகளை சிறு-குறு வணிகர்களின் நலன்காக்கும் நோக்கில் எடுத்திட வேண்டும் என பேரமைப்பின்  மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: