புதிதாக தேர்வு செய்யப்பட்ட 213 சிவில் நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை: புதிதாக தேர்வு செய்யப்பட்ட 213 சிவில் நீதிபதிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து, உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்.தமிழகம் முழுவதும் உள்ள சிவில் நீதிமன்றங்களில் காலியாக உள்ள சிவில் நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டது. இந்த தேர்வில் 213 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய சிவில் நீதிபதிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்யும் நிகழ்ச்சி நேற்று உயர் நீதிமன்ற அரங்கில் நடந்தது. சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி பதவிப்பிரமாணம் செய்து  வைத்தார். அவர்களுக்கான பயிற்சி முகாமையும் அவர் துவங்கி வைத்தார்.பின்னர் அவர் பேசுகையில், புதிய சிவில் நீதிபதிகளாக பதவியேற்றுள்ளவர்களில்  சிலர் உயர் நீதிமன்ற நீதிபதிகளாகலாம். சிலர் உச்ச நீதிமன்றம் செல்லலாம். மேலும்,  வழக்குகளை ஆர்வத்துடன் விசாரித்து, அறிவுப்பூர்வமாக செயல்பட்டு,   பாரபட்சமின்றி முடிவெடுக்க வேண்டும் என்றுக்கூறி, மீடியா விசாரணைகளின் தாக்கத்துக்கு ஆளாகாத வகையில் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

இதேபோல், நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய நீதிபதி மணிக்குமார் கூறுகையில்,  சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில்  200க்கும் மேற்பட்ட நீதிபதிகள் பதவியேற்பது இதுவே முதல்முறை. சிவில் நீதிபதிகள் பணிக்கு விண்ணப்பித்த  8,688 பேரில் 688 பேர் முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றனர். 674 பேர் பிரதான  தேர்வில்  தேர்ச்சி பெற்றனர். அவர்களில் 234 பேர் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டு, 213 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள். நீதிமன்றம் தவிர்த்து வேறு எங்கும்  நீதிபதி என நினைக்காதீர்கள். நல்ல நீதிபதிகள் என பெயர் வாங்க வேண்டும் என்றார்.வரவேற்புரையாற்றிய நீதிபதி சுந்தரேஷ் பேசுகையில், நீதிபதிகளாக வழக்குகளில் தீர்வு காண்பது சிக்கலான பணி. அர்ப்பணிப்பு, ஒருசார்பு, அச்சம் இல்லாமல் முடிவெடுக்க வேண்டும். வழக்குகளின் தகுதி அடிப்படையில் தீர்வு காணவேண்டும்.  நீதிபதிகளாவது சிக்கலானது அல்ல. நல்ல  நீதிபதிகளாக இருப்பது சிக்கலானது என்றார். மேலும், நன்றியுரை கூறிய நீதிபதி சிவஞானம், இந்த போட்டியில் கலந்துகொண்ட மற்றவர்கள் திறமைக்குறைந்தவர்கள் அல்ல. உங்களுக்கு கிரீடம் சூட்டப்படவில்லை. பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் சவாலானது. ஒவ்வொரு  நாளும் படிப்பினை தரக்கூடியது என்றார்.  இந்நிகழ்ச்சியில் நீதித்துறையை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: