‘கேங்மேன்’ வேலை வாங்கி தருவதாக கூறி ஒப்பந்த தொழிலாளர்களிடம் பணம் பறிப்பு?: சமூகவலைதளங்களில் பரவும் ஆடியோ

சென்னை: மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு, போட்டித்தேர்வு மூலமாக பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்நிலையே, நீண்ட நாட்களாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மற்றொருபுறம் பணம் சம்பாதிக்க துடிக்கும் சிலர், இந்த அறிவிப்புகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் தங்களை பெரிய அரசியல்வாதியாகவும், பல இடங்களில் தொடர்பு இருப்பதுபோலவும்  அடையாளப்படுத்திக்கொண்டு, வேலைக்கு தயாராகி வருவோரிடம் ஆசைவார்த்தை கூறி பணம் பறித்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. இவர்களை நம்பி பணம் கொடுத்தவர்கள் வேலை கிடைக்காமலும், பணமும் திரும்ப பெற முடியாமலும்  தவித்து வருகின்றனர்.ஒருகட்டத்தில், ஆங்காங்குள்ள போலீஸ் ஸ்டேஷன்கள், பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகங்களிலும் புகார் அளித்து வருவது தொடர்கதையாக இருக்கிறது. இவ்வாறு பலரும் ஏமாறுவதை தடுப்பதற்காக அரசு வேலைவாய்ப்புக்கு அறிவிப்பு  வெளியிடும் போது அதற்கு மேலே யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என குறிப்பிடப்பட்டு வருகிறது. அப்படியிருந்தும் சிலர் இதுபோன்ற பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர்.

அந்தவகையில், சமீபத்தில் மின்வாரியத்தில் கேங்மேன் என்ற பதவி உருவாக்கப்பட்டு, அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. 5,000 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பிக்கும் தேதி கடந்த ஏப்ரல் 24ம் தேதி துவங்கியது. இப்பதவிக்கு குறைந்தபட்ச கல்வி தகுதியாக ஐந்தாம் வகுப்பு என நிர்ணயிக்கப்பட்டது. ஏராளமானோர் விண்ணப்பித்துள்ள நிலையில், மின்வாரியத்தில் தற்போது பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களிடம், சிலர் ஆசைவார்த்தை கூறி  கேங்மேன் பணியில் சேர்த்து விடுகிறேன் என்று பணம் பறித்து வருவதாக தொழிற்சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், பணம் கொடுத்த ஒருவர், அதை உடனடியாக திரும்ப கேட்பது போன்ற ஆடியோவும் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதில், உடனே பணம் தராவிட்டால், முதல்வர், கமிஷனர் போன்ற இடங்களில் புகார் அளிப்பேன் என  பணம் வாங்கியவரிடம் கூறியுள்ளார்.

Related Stories: