ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் என்பது அரசியல் உள்நோக்கம் கொண்ட முயற்சி: டெல்லியில் திருமாவளவன் பேட்டி

புதுடெல்லி: நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துகிற நிலையை உருவாக்க வேண்டும் என ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி கூறுவது அரசியல்  உள்நோக்கம் கொண்டது என டெல்லியில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார்.நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துகிற நிலையை உருவாக்க வேண்டும் என ஒரே நாடு-ஒரே தேர்தல் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் எண்ணமாக உள்ளது. இதுகுறித்து அனைத்து கட்சிகளிடையே  பல தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து மேற்கண்ட திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் வரும் 19ம் தேதி எதிர்கட்சிகளிடத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

     இந்நிலையில், ஒரே நாடு-ஒரே தேர்தல் என்பது குறித்து விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கூறியதாவது:ஒரே நாடு-ஒரே தேர்தல் என்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது. இதனை எங்களது தரப்பில் எதிர்க்கிறோம். இதில் திட்டம் குறித்து வருகிற 19ம் தேதி ஆலோசனை நடத்துவதற்கு பிரதமர்  மோடி அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு  விடுத்துள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேர்தல் ஆணையத்துக்கு கால விரயத்தையும், பண செலவையும் குறைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் எந்த அளவுக்கு சாத்தியக்கூறுகள் இருப்பது என்பது மிகப்பெரிய  கேள்விக்குறியாக உள்ளது. இந்த திட்டம் என்பது அடிப்படையில் அரசியல் உள்நோக்கம் கொண்ட முயற்சியாகதான் கருதப்படுகிறது. ஏற்கனவே அரசியல் உள்நோக்கம் சபையில், இது சம்பந்தமான கூட்டத்தில் அம்பேத்கர் இதற்கு கடும் எதிர்ப்பு  தெரிவித்துள்ளார்.ஒரே நாடு ஒரே தேர்தலால் ஐந்து ஆண்டு முடிவதற்குள் அந்தந்த அரசின் ஆட்சியை கலைக்க இயலாது. இந்த திட்டத்தை தேர்தலில் அமல்படுத்துவதன் மூலம் அமெரிக்காவை போன்று அதிபர் ஆட்சியை இந்தியாவிற்குள் கொண்டு வருவதற்கு  மத்திய அரசு முயற்சிக்கிறது. அதனால் இந்த அரசியல் உள்நோக்கத்தை தான் நாங்கள் அம்பலப்படுத்த விரும்புகிறோம். அதே நேரத்தில் 5 ஆண்டுகாலம் ஒரே அரசு மக்களை ஆட்சி செய்ய வேண்டும் என்பதல்ல. பொறுப்பான ஒரு அரசு மக்களை ஆள வேண்டும் என்பதும்  எங்களுடைய கருத்தாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: