தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு கோரி விஷால் வழக்கு: உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை

சென்னை: நடிகர் சங்க தேர்தலுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு சென்னை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிடக்கோரி, நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:  சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் வரும் 23ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் நடைபெற உள்ளது. வணிகர் சங்கம் தொடர்பாக தங்களுக்கு வந்த புகாரை பரிசீலித்த பட்டினப்பாக்கம் போலீசார்  சத்யா ஸ்டூடியோ நிர்வாகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.  அதில், விஷால் அணிக்கும், எதிரணிக்கும் பிரச்னை உள்ள சூழலில் தேர்தல் நடைபெற உள்ளதாலும், அன்றைய தினம் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும்; அமைச்சர்கள் குடியிருப்புகள், நீதிபதிகள் குடியிருப்புகள், மருத்துவமனைகள் உள்ள  பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க தேர்தலை எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

 வேறு இடத்திற்கு மாற்ற பரிந்துரைக்கும்படி சத்யா ஸ்டூடியோ நிர்வாகத்திற்கும் போலீஸ் தரப்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த கடிதத்தின் அடிப்படையில் போலீஸ் அனுமதி பெற்றால்தான் தேர்தலை நடத்த முடியும் என்று சத்யா  ஸ்டூடியோ  தெரிவித்துள்ளது.

  தேர்தலுக்கு பாதுகாப்பு கோரி ஏற்கனவே சென்னை போலீஸ் கமிஷனரிடம் அளித்த கோரிக்கை மனு நிலுவையில் உள்ளது. எனவே, பாதுகாப்பு கோரிய மனுவை பரிசீலித்து தேர்தல் நடத்துவதற்கு பாதுகாப்பு வழங்குமாறு போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.

Related Stories: