×

சாலை விபத்துகளை தடுக்க கண்காணிப்பு கேமராவும் கட்டுப்பாட்டறையும் அமைக்கப்படுமா?: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: விபத்துக்களை தடுக்க சாலைகளில் 24 மணி நேரமும் கண்காணிக்கக்கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படுமா என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த கேம்ப் ரோட்டில் கடந்த வாரம் வேகமாக வந்த கார் ஒன்று சாலையில் இருந்த தடுப்புகள் மீது மோதியது. அதிவேகமாக கவனக்குறைவுடன் வாகனம் ஓட்டப்பட்டதால் சாலையில் சென்று கொண்டிருந்த வாகன  ஓட்டிகள் மீதும் அந்த கார் மோதியது. இதில் கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் ஊடகங்களில் வெளியானது.  இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த சம்பவம் தொடர்பாக பத்திரிகை செய்திகளை மேற்கோள்காட்டி தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார். வழக்கு நேற்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்  முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதி, விபத்துகளில் உயிரை இழப்பது, உடல் பாகங்களை இழப்பது தவிர்க்கப்பட வேண்டும். விபத்தை தடுப்பதற்கு முன்ேப வாகனங்கள் கண்காணிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக இந்த நீதிமன்றம் போலீசிடம் சில கேள்விகளை  எழுப்புகிறது.

அதாவது, அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்காணித்து அவை விபத்தை ஏற்படாதவாறு தடுத்து நிறுத்த 24 மணி நேரமும் இயங்கக்கூடிய அதிக சக்திவாய்ந்த கண்காணிப்பு கேமராக்களை அமைக்க முடியுமா?. விபத்தை  ஏற்படுத்தக்கூடிய அளவில் வாகனத்தை ஓட்டுபவரின் வாகனத்தை பிடித்து ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த முடியுமா?. விபத்தை ஏற்படுத்தக் கூடிய அளவில் அதிவேகமாக வாகனங்களை இயக்குபவர்களின் வாகனத்தின்  உரிமத்தை ரத்து செய்ய முடியுமா?.  கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தி அதில் உயிரிழப்பு ஏற்பட்டால் ஓட்டுநருக்கு தரப்படும் தண்டனையை 2 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்த அரசு சட்டம்  கொண்டுவருமா? என்ற கேள்விகளை கேட்டார்.   அப்போது, நீதிபதியிடம் குற்ற ஆவணக் காப்பகம் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.  அவற்றை ஆய்வு செய்த நீதிபதி, விபத்துகளை கட்டுப்படுத்த பொதுச் சாலைகளில் அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிந்து விபத்துகளை தடுக்க 24 மணி நேரமும் கண்காணிக்கக்கூடிய கட்டுப்பாட்டு அறையை  ஏற்படுத்த  வேண்டும்.  

இதற்கான செலவை இன்சூரன்ஸ் நிறுவனங்களும், சேம்பர் ஆப் காமர்ஸ் தரலாம்.சாலைகளில் அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் செல்வது, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட போக்குவரத்து விதி மீறல்களை கண்டுபிடித்து அவர்கள் மீது கண்டிப்பாக போலீஸ் அதிகாரிகளும், போக்குவரத்து  அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இந்த விஷயத்தில் மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 1ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

Tags : road accidents , road accidents,surveillance ,camera, Tamil Nadu ,government
× RELATED தமிழ்நாட்டில் சாலை விபத்து தடுக்க...