இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் பிரசாதங்களை அதிக விலைக்கு விற்க தடை: புதிய விலை நிர்ணயம் செய்து உத்தரவு

வேலூர்: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களில் பிரசாதங்களை அதிக விலைக்கு விற்பனை செய்ய தடை விதித்து, புதிதாக விலை நிர்ணயம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் பொதுமக்களுக்கு பிரசாதங்களை வழங்க தனியாருக்கு ஏலம் விடப்பட்டது. பிரசாதங்கள் கோயில்  கடைகளில், இடத்துக்கு ஏற்ப ஒவ்வொரு விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பெரும்பாலான பக்தர்கள் பிரசாதங்களை வாங்காமல் செல்வதாக புகார்கள் எழுந்தது.இந்நிலையில், கோயில்களில் பிரசாதங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என்று இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகம் முழுவதும் முக்கிய கோயில் வளாகங்களில் பிரசாதங்கள் வழங்கப்படுகிறது. இந்த பிரசாதங்களை அதிகளவில் காசு கொடுத்து வாங்கி செல்கின்றனர். இதையடுத்து பல  இடங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறைக்கு புகார்கள் சென்றது.அதன்பேரில் கமிஷனர் பணீந்திர ரெட்டி அனைத்து கோயில் செயல் அலுவலர்கள், இணை ஆணையர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார், அதில் 150 கிராம் கொண்ட சர்க்கரைப் பொங்கல்  ₹10க்கும், புளியோதரை ₹10க்கும், லட்டு 50 கிராம்  ₹10க்கும், மைசூர் பாகு 25 கிராம் ₹5க்கும், அதிரசம் 50 கிராம் ₹10க்கும், அப்பம் 50 கிராம் ₹10க்கும், கைமுறுக்கு 50 கிராம் ₹10க்கும், மிளகு வடை 25 கிராம் ₹5க்கும், தேன் குழல் 50 கிராம் ₹10க்கும் விற்பனை செய்ய வேண்டும் என்று  உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: