பாக். ராணுவத்தை விமர்சித்த பத்திரிகையாளர் குத்திக்கொலை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவத்தையும், ஐஎஸ்ஐ உளவு அமைப்பையும் விமர்சித்த பத்திரிகையாளர் குத்திக் கொல்லப்பட்டார். பாகிஸ்தானைச் சேர்ந்தவர் முகமது பிலால் கான் (22). பகுதி நேர பத்திரிகையாளராக இருந்தார். பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராகவும், ஐஎஸ்ஐ உளவு அமைப்பை விமர்சித்தும் கட்டுரைகள் எழுதியுள்ளார். இவரை டிவிட்டரில் 16,000 பேர்,  பேஸ்புக்கில் 22,000 பேர், யூடியூப் சேனலை 48,000 பேர் பின் தொடர்கின்றனர். பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐஎஸ்ஐ அமைப்புக்கு எதிரான இவரது விமர்சனங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

 நேற்று முன்தினம் இரவு இவரது மொபைல் போனுக்கு அழைப்பு ஒன்று வந்தது. அதன்பிறகு அங்கு வந்த ஒருவர், கான் மற்றும் அவரது நண்பரை அருகில் உள்ள காட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு கானை பட்டாக்கத்தியால் குத்தி  கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தை தடுக்க முயன்ற நண்பரும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.  இந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் அவரது மரணத்துக்கு நீதி கேட்டு ஹேஷ் டாக் போடப்பட்டு வருகிறது. அதில், பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐஎஸ்ஐ அமைப்பை விமர்சனம்  செய்த காரணத்தால்தான் கான் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார் என்று கருத்துக்களை பலர் தெரிவித்துள்ளனர். இந்த கொலை தொடர்பாக கருத்து தெரிவித்த கானின் தந்தை அப்துல்லா, ‘‘எனது மகனின் உடலில் பல இடங்களில் கூரான ஆயுதத்தால் கீறியுள்ளனர். இந்த சம்பவம் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது’’ என்றார்.  தீவிரவாதத்துக்கு எதிரானசட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Related Stories: