பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகளில் 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: கடைக்காரர்களுக்கு ரூ.32 ஆயிரம் அபராதம்

பூந்தமல்லி: பூந்தமல்லி மற்றும் திருவேற்காடு நகராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட 2 டன் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.தமிழகத்தில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் தனி குழுக்கள் அமைக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்படுகிறது. ஆனாலும், அதை மீறி கடைகளில் பிளாஸ்டிக் பை பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, பிளாஸ்டிக் தடையை தீவிரப்படுத்தும் வகையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துபவர்களிடமிருந்து நேற்று முதல் அபராதம் வசூலிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், பூந்தமல்லி நகராட்சி ஆணையர் டிட்டோ உத்தரவின் பேரில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பூந்தமல்லி டிரங்க் ரோடு, கரையான்சாவடி, குமணன்சாவடி, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகள், இறைச்சிக் கடைகள், வணிக நிறுவனங்கள், துணிக்கடைகள், உணவகங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் சுமார் 1 டன் பிளாஸ்டிக் பொருட்களைப் பறிமுதல் செய்தனர். மேலும், சம்மந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு ₹7 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அதேபோல், திருவேற்காடு நகராட்சி ஆணையர் சித்ரா உத்தரவின் பேரில், நகராட்சி சுகாதார அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் சாமுவேல் தலைமையில் திருவேற்காடு, நூம்பல், வேலப்பன்சாவடி, புளியம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள், உணவகங்கள், வணிக நிறுவனங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 1 டன் அளவிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கடைக்காரர்களுக்கு ₹25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மக்காத குப்பை வகையில் சேர்க்கப்பட்டு அரியலூரில் உள்ள சிமென்ட் தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்படும். அரசு உத்தரவின்படி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது. இது தொடர்பாக அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். தொடர்ந்து அரசு உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றனர்.

Related Stories: