இரவில் அடிக்கடி மின்வெட்டு மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

திருவொற்றியூர்:  திருவொற்றியூரில் தொடர் மின்வெட்டை கண்டித்து மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.திருவொற்றியூர் பகுதியில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் அடிக்கடி  மின் தடை செய்யப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 2 மணி நேரம்,  4 மணி நேரம் என தற்போது மின்வெட்டு நேரம் அதிகமாகி கொண்டே இருப்பதால் பொதுமக்கள் தூக்கத்தை தொலைத்து தவிக்கின்றனர். குறிப்பாக, முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள் புழுக்கத்தால் தூங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இதுபற்றி மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை  புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.   இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் திருவொற்றியூர் திருச்சிணாங்குப்பம்,  காலடிப்பேட்டை தேரடி போன்ற பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. ஆனால், நீண்ட நேரமாகியும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. அப்பகுதி மக்கள் மின் வாரிய அலுவலகத்தை பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார்  அளிக்க முயன்றனர்.

ஆனால், தொலைபேசியை யாரும் எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சுர் 200க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் இரவு காலடிப்பேட்டை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, அறிவிக்கப்படாத மின் வெட்டை கண்டித்து கோஷமிட்டனர்.  இதனையடுத்து அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இயைடுத்து, போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். பின்னர் நள்ளிரவு 12 மணியளவில் மின் விநியோகம் செய்யப்பட்டது.

Related Stories: