×

குரூப் 1 முதல்நிலை தேர்வில் தப்பு நடந்தது உண்மைதான் நிபுணர் குழு அறிக்கை வெளியிட முடியாது : உயர் நீதிமன்றத்தில் டிஎன்பிஎஸ்சி பதில் மனு

சென்னை: தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற குரூப் 1 பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வில் 1 லட்சத்து 68 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.  இந்த தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளுக்கு சரியான விடைகளை தெரிந்து கொள்ளும் வகையில்  வெளியான மாதிரி விடைத்தாளில் இருந்த 18 விடைகள் தவறானவை என புகார் எழுந்தது. இதையடுத்து, அந்த தவறான விடைகளை மறுமதிப்பீடு செய்யாமல் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என்று உத்தரவிடக்கோரி சென்னையை சேர்ந்த விக்னேஷ் உள்ளிட்ட தேர்வாளர்கள் டிஎன்பிஎஸ்சிக்கு கோரிக்கை மனு அளித்தனர். இதை ஏற்காமல் ஏப்ரல் மாதம் 3ம் தேதி முதல்நிலை தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இதனை எதிர்த்து விக்னேஷ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி வி.பார்த்திபன் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது 24 கேள்விகள் தான் தவறானவை என்றும், மாதிரி விடைத்தாளில் குறைபாடு ஏதுமில்லை என்று டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விளக்கத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, அரசு பணியாளர் தேர்வில் குளறுபடிகள் நடப்பதை அனுமதிக்க முடியாது என தெரிவித்து இந்த வழக்கில் டிஎன்பிஎஸ்சி பதில் தருமாறு உத்தரவிட்டார்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டிஎன்பிஎஸ்சி துணை செயலாளர் தாரா பாய் பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:தேர்வாணையம் வெளியிட்ட மாதிரி விடைத்தாளில் 96 தவறான பதில்கள் அளித்துள்ளதாக 4 ஆயிரத்து 390 விண்ணப்பதாரர்கள் மனு அளித்துள்ளனர். இவற்றை ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு அளித்த அறிக்கையில், மாதிரி விடைத்தாளில் 12 கேள்விகளுக்கு தவறான விடைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதேபோல் வினாத்தாளில் 5 கேள்விகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சரியான விடைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கண்டறிந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர 7 கேள்விகளுக்கான மாதிரி விடைகளும் தவறானவை எனவும் நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது. நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில், தேர்வு எழுதிய அனைவருக்கும் கூடுதலாக 6 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்பின்னரே முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அரசு பணியாளர்கள் தேர்வின் மதிப்பெண்களை இயந்திரத்தனமாக வெளியிட கூடாது என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, நிபுணர் குழுவின் அறிக்கையை இணையதளத்தில் வெளியிட முடியாது. இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணையை ஜூன் 19ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.

Tags : TNPCC ,High Courts , Expert Panel Report ,Cannot Release Group 1 Preliminary Exam:
× RELATED தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க கோரி ஆர்ப்பாட்டம்