தண்ணீர் பிரச்னையை தவிர்ப்பதற்காக பேட்டியை ரத்து செய்த எடப்பாடி

சென்னை: தண்ணீர் பிரச்னை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளிப்பதாக அறிவித்த அதிகாரிகள், பின்னர் அந்த பேட்டியை ரத்து செய்து விட்டனர். சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 12 மணிக்கு தண்ணீர் பிரச்னை குறித்து மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்றும்,அதைத்தொடர்ந்து நேற்று மதியம் ஒரு மணிக்கு முதல்வர் நிருபர்களை சந்தித்து பேட்டி அளிப்பார் என்று கூறப்பட்டது. இதற்காக அனைத்து நிருபர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. அதேபோன்று, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும் நேற்று 12 மணிக்கு தலைமை செயலகம் வந்து விட்டனர். ஆனால், திடீரென மதியம் 12 மணிக்கு, குடிநீர் ெதாடர்பான நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக முதல்வர் அலுவலகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் தற்போது தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னை குறித்தான கூட்டத்தை முதல்வர் ஏன் ரத்து செய்தார் என்று விசாரித்தபோது தலைமை செயலக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் வேலுமணி தண்ணீர் பிரச்னை குறித்து சென்னை மாநகராட்சியில் ஆலோசனை நடத்திவிட்டு தலைமை செயலகம் வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அமைச்சர் வேலுமணியோ, மாநகராட்சி அலுவலகத்திலேயே பத்திரிகையாளர்களை சந்தித்து தண்ணீர் பிரச்னை குறித்து தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக பேட்டி அளித்து விட்டார். அதன்பிறகு முதல்வர், தனியாக நிருபர்களை சந்தித்து மீண்டும் தண்ணீர் பிரச்னை குறித்து பேட்டி அளிப்பது சரியாக இருக்காது. சென்னையில் நீண்ட நாட்களுக்கு பிறகும், அதுவும் தற்போதுள்ள தண்ணீர் பிரச்னை குறித்து முதல்வரிடம் பேட்டி எடுக்க ஆவலோடு வந்த நிருபர்களும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Related Stories: