×

திமுக எம்எல்ஏ ராதாமணி மரணம் அடைந்ததால் விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு : 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல்

சென்னை: உடநலக்குறைவால் திமுக எம்எல்ஏ ராதாமணி கடந்த வெள்ளிக்கிழமை மரணம் அடைந்தார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக தமிழக அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து 6 மாதத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் அங்கு இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் ராதாமணி (திமுக). இவர், உடநலக்குறைவு காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை (14ம் தேதி) காலை மரணம் அடைந்தார். இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதி காலியாக உள்ளதாக தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் நேற்று அதிகாரப்பூர்வமாக அரசிதழில் வெளியிட்டுள்ளார். இந்த தகவல், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவுக்கும் கடிதம் மூலம் நேற்று தெரிவிக்கப்பட்டது. அவர் அந்த கடிதத்தை டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைப்பார்.விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், 6 மாதத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் இந்திய தேர்தல் ஆணையம் அங்கு இடைத்தேர்தலை அறிவிக்கும்.

அதேபோன்று, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவாக இருந்த எச்.வசந்தகுமார் (காங்கிரஸ்) நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதி எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். தற்போது நாங்குநேரி தொகுதியும் காலியாக உள்ளது. இதனால் தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. அதேபோன்று, வேலூர் எம்பி தொகுதியிலும் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. வேலூர் மக்களவை தொகுதிக்கும் இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளது. அப்போது, காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி ஒருவர் கூறினார்.

Tags : Vikramvandi ,death ,MLA ,DMK ,Radhamani , DMK MLA Radhamani's Death,By-election, 6 months
× RELATED திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவு...