×

பேரணாம்பட்டு அருகே அரவட்லா மலைகிராமத்தில் தண்ணீரின்றி கால்நடைகளுக்கு தீவனமாகும் கருகிய பயிர்கள்

பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு அருகே அரவட்லா மலைகிராமத்தில் தண்ணீரின்றி கருகும் பயிர்கள் கால்நடைகளுக்கு தீவனமாக மாறியுள்ளது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதி கிராமங்களில்  நிலத்தடி நீர்மட்டம்  வெகுவாக குறைந்துள்ளது. இதில் எப்போதும் குளிர்ச்சியாகவும் நீர் நிலைகள் உள்ள பகுதியாகவும் விளங்கக்கூடிய அரவட்லா மலை கிராமமும் இந்த ஆண்டு குடிநீர் பஞ்சத்திற்கு தப்பவில்லை. கோடைவெயில் மற்றும் போதிய மழையில்லாததாலும் விவசாய நிலங்கள் வறண்டு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  பேரணாம்பட்டு, அரவட்லா மலைகிராமத்தை சேர்ந்தவர் நேரு(48) விவசாயி.  இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அவருக்கு சொந்தமான 2.5 ஏக்கர் நிலத்தில் கேழ்வரகு பயிரிட்டிருந்தார்.  அப்போது, அவருக்கு சொந்தமான கிணற்றில் 350 அடி வரை தண்ணீர் இருந்தது. தற்போது, 3 மாதங்களாக நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து கிணற்றில் நீர் முழுவதுமாக வற்றிவிட்டது. இதனால், கேழ்வரகு பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் அனைத்தும் வெயிலில் கருகி 2.5 ஏக்கர் பயிர்களும் மாடுகளுக்கு தீவனமாகியுள்ளது.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட விவசாயி நேரு கூறுகையில், ‘எங்கள் ஊரில் எப்போதும் தண்ணீர் பஞ்சம் வந்ததில்லை. இந்த ஆண்டு சுற்றுப்புற பகுதியில் உள்ள கிணறுகளிலும் தண்ணீர் வற்றிவிட்டது. தண்ணீரை நம்பித்தான் விவசாயம் செய்கிறோம். தற்போது மழையும் எங்களை ஏமாற்றிவிட்டது.  இதனால், வட்டிக்கு கடன் வாங்கி பயிரிட்ட கேழ்வரகு பயிர்கள் அனைத்தும் கருகிவிட்டது.  தற்போது, வாங்கிய கடனை கட்டுவதா அல்லது குடும்பத்தை கவனிப்பதா என்பதே கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, தமிழக அரசு கருகிப்போன பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்’ என்று கண்ணீருடன் கூறினார். இதேபோல் அரவட்லா பகுதியில் ஜலபதி என்ற விவசாயி பயிரிட்டிருந்த ஒரு ஏக்கர் பரப்பிலான தக்காளி செடிகளும் முற்றிலும் காய்ந்து விட்டன. இதுகுறித்து ஜலபதி கூறுகையில், ‘ கிணற்று நீரை நம்பி தக்காளி செடி பயிரிட்டேன். ஆனால் தற்போது சொட்டு நீரின்றி வறண்டு விட்டது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறேன். கருகிய பயிர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : Paranampattu ,Aravalla , Farming cattle,water , Aravatla hill village,Paranampattu
× RELATED ேபரணாம்பட்டு அருகே 3 ஆயிரம் லிட்டர் சாராயம் பறிமுதல்