தண்ணீருக்காக மக்கள் கண்ணீர் விடும் நிலையில் ஓபிஎஸ்சுக்கு கோவையில் புத்துணர்வு சிகிச்சை தேவையா? : சமூக ஆர்வலர்கள் கேள்வி

கோவை: தண்ணீருக்காக மக்கள் கண்ணீர் வடிக்கும் நிலையில், எதைப் பற்றியும் கவலைப்படாமல் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோவையில் புத்துணர்வு சிகிச்சை பெறுவது தேவையா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இயற்கை முறையில் சிகிச்சை பெறுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே அல்லது ஜூன் மாதம் கோவை வருவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு இயற்கை முறையில் புத்துணர்வு சிகிச்சை பெறுவதற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கடந்த சனிக்கிழமை தேனியில் இருந்து கோவை வந்தார். கணபதி, சங்கனூர் ரோட்டில் உள்ள ஆர்.கே.இயற்கை நல மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவர் புத்துணர்வு சிகிச்சை அளிப்பதற்கான சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் இயற்கை மருத்துவ முறையில் புத்துணர்வு சிகிச்சை அளித்தனர். அவர் தொடர்ந்து ஒரு வாரம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுகிறார்.

தமிழகத்தில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் 10 கொடுத்து லாரியில் பிடிக்கும் நிலை நிலவுகிறது. அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் 40 முதல் 80 வரை விலை கொடுத்து ஒரு கேன் வாங்கிச் செல்கின்றனர். பல கிராமங்களில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் முழுவதும் அழிந்து போகும் சூழ்நிலை உள்ளது. பல கிராமங்களில் குடிநீருக்கு தண்ணீர் இல்லாமல், பல கி.மீ.தூரம் சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். மக்கள் இந்த அளவுக்கு வேதனையை அனுபவித்து வரும் நிலையில், அது குறித்த எந்த வித கவலையும் இல்லாமல் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புத்துணர்வு சிகிச்சை பெறுவது அவசதியம்தானா? இப்போது இது தேவையா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இயற்கை முறையில் சிகிச்சை என்பது மசாஜ் மற்றும் மூலிகை ஆயில் மூலம் கழிச்சல், பிழிச்சல் போன்ற சிகிச்சை அளிக்கப்படுகிறதாம். இதைத்தான் தற்போது சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related Stories: