×

மூளையில்லா கேப்டன்...

இந்திய அணியுடனான உலக கோப்பை லீக் ஆட்டத்தில், பாகிஸ்தான் அணி டி/எல் விதிப்படி 89 ரன் வித்தியாசத்தில் மண்ணைக் கவ்வியது. உலக கோப்பை ஆட்டங்களில் பாகிஸ்தான் அணியிடம் தோற்றதில்லை என்ற சாதனையை இந்தியா தக்கவைத்துக் கொண்டது. பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக 7 உலக கோப்பை போட்டிகளில் இந்தியாவிடம் வீழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மான்செஸ்டர், ஓல்டு டிரபோர்டு ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீசியது. இந்தியா 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன் குவித்தது. ரோகித் 140, கோஹ்லி 77, கே.எல்.ராகுல் 57, ஹர்திக் 26 ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 1 விக்கெட் இழப்புக்கு 117 ரன் என்ற வலுவான நிலையில் இருந்து 129 ரன்னுக்கு 5 விக்கெட் என திடீர் சரிவை சந்தித்தது.அந்த அணி 35 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் 40 ஓவரில் 302 ரன் எடுத்தால் வெற்றி என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. 40 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன் மட்டுமே எடுத்த அந்த அணி டி/எல் விதிப்படி 89 ரன் வித்தியாசத்தில் தோற்றது.

தோல்விக்கு கேப்டன் சர்பராஸ் அகமதுவின் தவறான வியூகங்களே காரணம் என்று முன்னாள் வேகம் சோயிப் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘2017 சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இந்திய கேப்டன் கோஹ்லி செய்த தவறையே இப்போது சர்பராஸ் செய்துள்ளார். பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்தியாவை முதலில் பேட் செய்ய அழைத்தது முட்டாள்தனமான முடிவு. மூளையில்லாத கேப்டன் என்பதை அவர் நிரூபித்துவிட்டார். இலக்கை துரத்துவதில் பாகிஸ்தான் பலவீனமான அணி என்பதை அவர் மறந்துவிட்டார். முதலில் பேட் செய்து 260 ரன் எடுத்திருந்தால் கூட இந்திய அணியை வீழ்த்தியிருக்க முடியும்’ என்றார்.பாகிஸ்தான் அணி முன்னாள் கேப்டனும் தற்போதைய பிரதமருமான இம்ரான் கானும் கூட டாஸ் வென்று பேட் செய்ய வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. தங்கள் அணியின் தோல்வியால் விரக்தியடைந்த  ரசிகர்கள் டிவியை உடைத்தும், வீரர்களுக்கு எதிராக கோஷமிட்டும் ஆத்திரத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.


Tags : Brainless captain ...
× RELATED கேல் ரத்னா விருதுக்கு இந்திய ஹாக்கி மகளிர் அணி கேப்டன் பெயர் பரிந்துரை